/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிண்டி சிட்கோ வளாகத்தில் பஸ் நிலையம் பயணியர் கோரிக்கைக்கு தீர்வு எப்போது?
/
கிண்டி சிட்கோ வளாகத்தில் பஸ் நிலையம் பயணியர் கோரிக்கைக்கு தீர்வு எப்போது?
கிண்டி சிட்கோ வளாகத்தில் பஸ் நிலையம் பயணியர் கோரிக்கைக்கு தீர்வு எப்போது?
கிண்டி சிட்கோ வளாகத்தில் பஸ் நிலையம் பயணியர் கோரிக்கைக்கு தீர்வு எப்போது?
ADDED : மே 09, 2024 12:10 AM

சென்னை, சென்னை மாநகராட்சி, 168வது வார்டு, கிண்டி தொழிற்பேட்டை வளாகம், 404 ஏக்கர் பரப்பு கொண்டது. கடந்த 1958ம் ஆண்டு முதல் தொழிற்பேட்டை செயல்படுகிறது.
இங்கு, 83 தெருக்களில், 14.4 கி.மீ., நீள சாலைகள் உள்ளன. இதில், 60 சதவீதம் அரசு நிறுவனங்கள், 40 சதவீதம் தனியார் தொழில் நிறுவனங்கள் மற்றும் 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
விரிவாக்கத்திற்கு முந்தைய சென்னை மாநகராட்சியின் நுழைவு வாயிலாக, சிட்கோ இருந்தது. சுற்றி, கத்திப்பாரா மேம்பாலம், ஈக்காட்டுத்தாங்கல் பிரதான சாலை, அண்ணா சாலை ஆகியவை உள்ளன.
பிரதான சாலையை ஒட்டி, சிட்கோ பேருந்து நிலையம் உள்ளது. செங்கல்பட்டு, தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு உள்ளிட்ட பகுதியில் இருந்து, பாரிமுனை, தி.நகர், திருவான்மியூர், கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள், சிட்கோ நிலையம் நின்று செல்லும்.
இங்கிருந்தும், பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், 1, 2 நிமிடத்திற்கு ஒரு பேருந்து வீதம், சிட்கோ நிலையத்தில் நின்று செல்கின்றன. அருகில், மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில் நிலையம், ரேஸ் கோர்ஸ் பேருந்து நிறுத்தம் உள்ளதால், பேருந்து மற்றும் ரயில் மாறி செல்பவர்கள் கூடுவதால், சிட்கோ பேருந்து நிலையம் எப்போதும் கூட்டமாக இருக்கும்.
ஆனால், போதிய இடவசதி இல்லாமல், பேருந்துகளை வரிசையாக நிறுத்த முடியாமல், ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர். கண்ட இடங்களில் நிறுத்துவதால், பயணியரும் தங்களுக்குரிய பேருந்துகளை அடையாளம் காண முடியாமல் திணறுகின்றனர்.
அருகில் உள்ள காவல் நிலைய சாலை, கடந்த ஆண்டு அடைக்கப்பட்டது. இதனால், கிண்டியில் இருந்து இயக்கப்படும், கோயம்பேடு நோக்கி செல்லும் பேருந்துகளை நிறுத்த இடமில்லாமல், ஆலந்துார் சாலையில் நிறுத்தப்படுகின்றன.
மறுதிசையில், ஓ.எம்.ஆர்., வழியாக செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. இதனால், ஆலந்துார் சாலையில் வாகன நெரிசல் ஏற்படுகிறது.
கூட்ட நெரிசலை குறைக்க, முக்கிய வழித்தடங்களுக்கு பேருந்துகள் இயக்க, போக்குவரத்து துறை தயாராக உள்ளது. ஆனால், இடவசதி இல்லாததால், பல ஆண்டுகளாக திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
காவல் நிலையம் எதிரே உள்ள கடைகளை, வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு, அந்த இடத்தை பேருந்துகள் நிறுத்தும் இடமாக மாற்றினால், பொதுமக்கள் மிகவும் பயனடைவர். இதுகுறித்து, பயணியர் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கடந்த ஆட்சியின்போது, சிட்கோ நிர்வாகம் கடைகளை இடம் மாற்றி அமைத்து, பேருந்துகள் நிறுத்த வசதி ஏற்படுத்த தயாராக இருந்தது. ஆனால், அரசியல் தலையீடு காரணமாக, அத்திட்டம் கைவிடப்பட்டது.
வாகன நெரிசலை குறைக்க, பொது போக்குவரத்து பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என, அரசு வலியுறுத்தி வருகிறது. இதற்கு, மெட்ரோ ரயில் திட்டம் முக்கிய பங்காற்றுகிறது. அதேபோல், கூடுதல் பேருந்து வசதிகள் ஏற்படுத்த, முக்கிய நிலையங்களை மேம்படுத்த வேண்டியது அவசியம்.
ஒரு சில கோடி ரூபாய் ஒதுக்கினால், கிண்டி சிட்கோ பேருந்து நிலையமாக, நல்ல முறையில் மேம்படுத்த முடியும். இதற்கு, சிட்கோ நிர்வாகம், போக்குவரத்து துறை, சி.எம்.டி.ஏ., இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.