/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்வாரியத்தில் தொலைபேசி ரிசீவரை கீழே எடுத்து வைப்பது ஏன்? சோழிங்கநல்லுார் மண்டல குழுவில் கவுன்சிலர் கேள்வி
/
மின்வாரியத்தில் தொலைபேசி ரிசீவரை கீழே எடுத்து வைப்பது ஏன்? சோழிங்கநல்லுார் மண்டல குழுவில் கவுன்சிலர் கேள்வி
மின்வாரியத்தில் தொலைபேசி ரிசீவரை கீழே எடுத்து வைப்பது ஏன்? சோழிங்கநல்லுார் மண்டல குழுவில் கவுன்சிலர் கேள்வி
மின்வாரியத்தில் தொலைபேசி ரிசீவரை கீழே எடுத்து வைப்பது ஏன்? சோழிங்கநல்லுார் மண்டல குழுவில் கவுன்சிலர் கேள்வி
ADDED : ஜூலை 16, 2024 12:31 AM
சோழிங்கநல்லுார், சோழிங்கநல்லுார் மண்டல கூட்டம் மண்டல தலைவர் மதியழகன் தலைமையில், நேற்று நடந்தது. இதில், துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கவுன்சிலர்கள் பேசியதாவது:
கோவிந்தசாமி, அ.தி. மு.க., 193வது வார்டு: துரைப்பாக்கத்தில் ஆழ்துளை கிணறுகளில் உப்பு தன்மை அதிகரித்துள்ளது. வாரியம் குடிநீர் வினியோகத்தை அதிகரிக்க வேண்டும். சுகாதார பணியில் தொய்வு உள்ளது.
விமலாகருணா, தி.மு.க., 194வது வார்டு: பருவமழைக்குமுன், ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள குளங்களை துார்வார வேண்டும்.
ஏகாம்பரம், தி.மு.க., 195வது வார்டு: ஒக்கியம் துரைப்பாக்கத்தில், வடிகால் பணியால் ஆக்கிரமிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏழை, நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதிகளில் துாய்மை பணி முறையாக நடக்கவில்லை.
அஸ்வினி கருணா, அ.தி.மு.க., 196வது வார்டு: கண்ணகிநகரில் அதிகரித்துள்ள தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும். பருவமழைக்குமுன், பழுதடைந்துள்ள வாரிய குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும்.
மேனகா சங்கர், அ.தி.மு.க., 197வது வார்டு: பனையூரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நடக்கும் சட்டவிரோத செயல்களை போலீசார் தடுக்க வேண்டும். தடையின்மை சான்று வழங்காததால், சாலை சீரமைப்பில் சிக்கல் நீடிக்கிறது.
குழப்பம்
லியோ என்.சுந்தரம், பா.ஜ., 198வது வார்டு: காரப்பாக்கத்தில் 15 ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பது எப்போது? தெரு பலகையில் பெயர் எழுதாததால், குழப்பம் நீடிக்கிறது. இரண்டு ஆண்டுகள் ஆகியும் வார்டு அலுவலகம் கட்டித்தரவில்லை.
சங்கர், தி.மு.க., 199வது வார்டு: மின்தடையின்போது பொதுமக்கள் அழைத்தால், மின்வாரிய அலுவலகத்தில் உரிய பதில் கூறுவதில்லை. தொலைபேசி ரிசீவரை கீழே எடுத்து வைக்கின்றனர்.
ஓ.எம்.ஆர்., அணுகுசாலை ஆக்கிரமிப்புகளால், விபத்துகள் அதிகரித்துள்ளன.
முருகேசன், தி.மு.க., 200வது வார்டு: சுனாமி நகரில் மாநகராட்சி, வாரிய அதிகாரிகள் இடையே ஒற்றுமை இல்லாததால், கழிவுநீரால் பெண்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படுகிறது.
ரேஷன் கடைகளில், மக்களுக்கு வழங்க வேண்டிய எண்ணெய், சக்கரை எங்கு செல்கிறது என அதிகாரிகள் கண்டறிய வேண்டும்.
இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர்.
இதில், மின்வாரியம், காவல்துறை அதிகாரிகள் கூட்டத்திற்கு வராததால், அத்துறை சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை.
மீதமுள்ள கேள்விகளுக்கு, அந்தந்த துறை அதிகாரிகள் பதில் அளித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
துாய்மை பணி, ரேஷன் கடைகளில் விதிமீறல் குறித்து ஆதாரம் அளித்தால், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அணுகு சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற, பாதுகாப்பு கேட்டு போலீசிடம் கடிதம் கொடுத்து காத்திருக்கிறோம்.
திட்ட பணிகளில் உள்ள குளறுபடி நீங்கியதும், சீராக குடிநீர் வினியோகித்து, சாலை சீரமைக்க தடையின்மை சான்று வழங்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் பதில் அளித்தனர்.
பாராட்டு
ஒக்கியம் துரைப்பாக்கத்தில், வடிகால் பணியை பாதியில் நிறுத்தி சென்றதால், பள்ளம் தோண்டிய பகுதியை ஒட்டி உள்ள வீடுகள் இடியும் அபாயம் ஏற்பட்டது.
இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, கிடப்பில் போடப்பட்ட கோப்புகள் கையெழுத்தாகி பணி துவங்கியது.
இதற்கு, தி.மு.க., கவுன்சிலர் ஏகாம்பரம், உரிய நேரத்தில் செய்தி வெளியானதால், விபத்து அபாயம் தடுக்கப்பட்டது. இதற்கு உதவிய தினமலர் நாளிதழுக்கு பாராட்டுகள்'' என கூறினார்.
தொடர்ந்து, பல்வேறு திட்டங்களுக்கான 131 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

