/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கூவத்தில் கட்டடக்கழிவுகளை அகற்ற கெடு 10 நாள்! ஆணையத்திற்கு தீர்ப்பாயம் கறார் உத்தரவு
/
கூவத்தில் கட்டடக்கழிவுகளை அகற்ற கெடு 10 நாள்! ஆணையத்திற்கு தீர்ப்பாயம் கறார் உத்தரவு
கூவத்தில் கட்டடக்கழிவுகளை அகற்ற கெடு 10 நாள்! ஆணையத்திற்கு தீர்ப்பாயம் கறார் உத்தரவு
கூவத்தில் கட்டடக்கழிவுகளை அகற்ற கெடு 10 நாள்! ஆணையத்திற்கு தீர்ப்பாயம் கறார் உத்தரவு
ADDED : செப் 19, 2024 11:46 PM

சென்னை : 'அமைந்தகரை, சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில், கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டட கழிவுகளை, செப்., 30ம் தேதிக்குள் அகற்ற வேண்டும்' என, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, அமைந்தகரை காவல் நிலையம் பின்புறத்தில் உள்ள எம்.எம்., காலனி வழியாக கூவம் ஆறு செல்கிறது. மழைக்காலத்தில், கூவத்தில் அதிகப்படியான வெள்ளம் சென்றதால், அப்பகுதியில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, கூவம் கரையோரத்தின் இரு புறங்களிலும், கடந்தாண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இங்கு போதிய தடுப்புகள் அமைக்காததால், மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. சிலர், அத்துமீறி குப்பை மற்றும் கட்டட கழிவுகளை கொட்டி வருகின்றனர். இது தொடர்பாக, மே 9ல், நம் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்த தீர்ப்பாயம், 'சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான இரண்டு அடுக்கு உயர்மட்ட மேம்பால சாலைப் பணிகளுக்கு கூவம் ஆற்றில் கட்டுமான கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.
'இது குறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தமிழக அரசின் தலைமை செயலர், சென்னை நதிகள் மீட்பு இயக்கம், நகர்ப்புற உள்ளாட்சி, நீர்வளத்துறை உள்ளிட்ட தமிழக அரசு துறைகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் தீர்ப்பாயத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசின் நீர்வளத்துறை சார்பில் வழக்கறிஞர் சண்முகநாதன் ஆஜரானார்.
அவர், ''கூவம் ஆற்றின் குறுக்கே கட்டடக் கழிவுகள் கொட்டப்படுவதால், நீரோட்டத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, அண்ணா பல்கலை வாயிலாக ஆய்வு மேற்கோள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை முறையான ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. வடகிழக்கு பருவமழை துவங்கிவிட்டால், ஆற்றில் தண்ணீர் செல்ல தடை ஏற்படும்,'' என்றார்.
தேசிய நெடுஞ்சாலை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ''இரண்டு அடுக்கு மேம்பால சாலைக்காக, ஆற்றின் உள்ளே துாண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஆற்றின் குறுக்கே கட்டுமான பொருட்கள் கொட்டப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பே கட்டடக் கழிவுகளை அகற்றப்படும்,'' என உறுதி அளித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
கட்டட கழிவுகளை அகற்ற கொடுக்கப்பட்ட நிபந்தனையை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செயல்படுத்தவில்லை எனில், நீர்வளத்துறை உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதற்கு மாறாக, தீர்ப்பாயத்தில் முறையிடுவது ஏன்?
கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டடக் கழிவுகளை, வரும் 30க்குள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அகற்ற வேண்டும்.
தீர்ப்பாய உத்தரவின் படி, கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டதா என்பது குறித்து அக்., 1ம் தேதி தமிழக நீர்வளத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை வரும் அக்., 3ல் நடக்கும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.