/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செம்பரம்பாக்கம் ஏரியில் 100 கன அடி நீர் திறப்பு
/
செம்பரம்பாக்கம் ஏரியில் 100 கன அடி நீர் திறப்பு
ADDED : அக் 21, 2025 11:55 PM

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. இரண்டு நாட்களாக பெய்த மழைக்கே ஏரிகள் நிரம்பி வருகின்றன.
சென்னையில் குடிநீர் ஆதாரமான, 3.64 டி.எம்.சி., கொள்ளளவுடன், 24 அடி நீர் மட்டமும் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி, கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி, கொள்ளளவு 2.65 டி.எம்.சி.,யும், நீர் மட்டம், 20.20 அடியாக உயர்ந்தது. ஏரிக்கு வினாடிக்கு 800 கன அடி நீர் வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியின் ஐந்து கண் மதகில் இருந்து, 100 கன அடி நீர் நேற்று மாலை திறக்கப்பட்டது.
நீர்வரத்து அதிகரித்தால் வெளியேற்றப்படும் நீரின் அளவை படிப்படியாக அதிகரிக்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதனால், உபரி நீர் செல்லும் சிறுகளத்துார், காவனுார், குன்றத்துார், திருமுடிவாக்கம், வழுதலம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பள்ளிக்கரணை சுற்றுப்பகுதிகளில் வெள்ள பாதிப்பை தவிர்க்கும் வகையில், கீழ்கட்டளை மற்றும் நாராயணபுரம் ஏரிகளில் இருந்து முன்கூட்டியே புதிய ரெகுலேட்டர்கள் வாயிலாக, நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
குன்றத்துார் அருகே, 400 ஏக்கர் பரப்பிலான சோமங்கலம் பெரிய ஏரி, கன மழையால் நேற்று நிரம்பியது.