/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நாட்டு வெடி விபத்தில் நான்கு பேர் பலி சட்ட விரோதமாக பதுக்கிய மூவர் கைது
/
நாட்டு வெடி விபத்தில் நான்கு பேர் பலி சட்ட விரோதமாக பதுக்கிய மூவர் கைது
நாட்டு வெடி விபத்தில் நான்கு பேர் பலி சட்ட விரோதமாக பதுக்கிய மூவர் கைது
நாட்டு வெடி விபத்தில் நான்கு பேர் பலி சட்ட விரோதமாக பதுக்கிய மூவர் கைது
ADDED : அக் 21, 2025 11:55 PM

ஆவடி: வீட்டில் பதுக்கி விற்கப்பட்ட நாட்டு வெடிகள் வெடித்து, ஆவடியில் நான்கு பேர் உயிரிழந்த விவகாரத்தில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான விஜயன் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆவடி அடுத்த பட்டாபிராம், தண்டுரை, விவசாய இரண்டாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 53; பூ வியாபாரி.
ஆட்டோ ஓட்டுநரான இவரது மூத்த மகன் விஜயன், 27, கூடுவாஞ்சேரியில் இருந்து சட்டவிரோதமாக, அதிக சத்தத்துடன் வெடிக்கும் நாட்டு வெடிகளை மொத்தமாக வாங்கி வந்து, வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தார். தீபாவளிக்காக அதிக நாட்டு வெடிகளை பதுக்கி வைத்திருந்தார்.
இந்நிலையில், கடந்த 18ம் தேதி மதியம் திருநின்றவூர், நத்தமேடை சேர்ந்த எம்.பி.ஏ., பட்டதாரியான சுனில் பிரகாஷ், 23, யாசின், 25, பொன்னேரி, ஆரணி தென்னம்பேடை சேர்ந்த சுமன், 22, சஞ்சய், 22, ஆகிய நான்கு பேரும் நாட்டு வெடிகள் வாங்க, விஜயன் வீட்டுக்கு சென்றனர்.
அப்போது, அவர்கள் வாங்கிய நாட்டு வெடிகள் எதிர்பாராத விதமாக வெடித்து சிதறின. வீடு முழுதும் கரும்புகை சூழ்ந்தது. வீட்டின் கூரை மற்றும் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்தன.
கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய, சுனில் பிரகாஷ், யாசின், சுமன், சஞ்சய் ஆகிய நான்கு பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தின்போது, வாடிக்கையாளர் ஒருவரை வழியனுப்ப விஜயன் வெளியே சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி, தலைமறைவாக இருந்தார்.
பட்டாபிராம் உதவி கமிஷனர் கிரி தலைமையில், இரண்டு தனிப்படை போலீசார் விஜயனை தேடி வந்தனர்.
விஜயனின் தந்தை ஆறுமுகம், பட்டாபிராம் தண்டுரையை சேர்ந்த அவரது நண்பர் தாமோதரன், 38 ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த விஜயனை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
விஜயன் ஓராண்டுக்கு மேலாக, உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக நாட்டு வெடி விற்பனை செய்து வருகிறார்.
உள்ளூர் போலீசார், நுண்ணறிவு பிரிவினருக்கு தெரிந்து கண்டும் காணாமல் இருந்துள்ளனர்.
இதுகுறித்து விசாரணை நடத்துவதோடு, வேறு எங்கும் நாட்டு வெடிகள் விற்கிறதா எனவும், ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.