/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பீக்ஹவர்சில் நுழைந்த 1,000 கனரக வாகனங்கள் சிறைபிடிப்பு
/
பீக்ஹவர்சில் நுழைந்த 1,000 கனரக வாகனங்கள் சிறைபிடிப்பு
பீக்ஹவர்சில் நுழைந்த 1,000 கனரக வாகனங்கள் சிறைபிடிப்பு
பீக்ஹவர்சில் நுழைந்த 1,000 கனரக வாகனங்கள் சிறைபிடிப்பு
ADDED : ஜூன் 20, 2025 12:37 AM

சென்னை, குடிநீர் லாரி மோதியதில் சிறுமி பலியான சம்பவத்திற்கு பின் உஷாரான போலீசார், 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில் சென்னைக்குள் குடிநீர், கழிவுநீர் லாரிகள் நுழைய தடைவிதித்துள்ளனர்.
சென்னை, கொளத்துார், பொன்னியம்மன்மேடு பகுதியைச் சேர்ந்தவர் யாமினி. இவர், தன் மகள் சவுமியாவை, 10, புரசைவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் விட, நேற்று முன்தினம் காலை, ஸ்கூட்டர் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
பேப்பர் மில்ஸ் சாலை, வீனஸ் சந்தை பகுதியை கடந்து செல்லும்போது, சாலையில் இருந்த பள்ளத்தால் வாகனம் தடுமாறியதில், பின்னால் அமர்ந்திருந்த சவுமியா சாலையில் விழுந்தார்.
அப்போது, அவ்வழியே வந்த தனியார் குடிநீர் லாரி, சவுமியா மீது ஏறியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே சிறுமி பலியானார். சிறுமி உயிரிழப்பிற்கு காரணமான குடிநீர் லாரி ஓட்டுநரான திருவண்ணாமலையைச் சேர்ந்த கார்த்திகேயன், 41, என்பவரை கைது செய்தனர்.
'பீக் ஹவர்ஸ்' நேரமான காலை 7:00 மணி முதல் 12:00 மணி வரை; மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, கனரக வாகனங்கள் பொது சாலையில் செல்ல தடையுள்ள நிலையில், அதை அலட்சியப்படுத்தி இயக்கப்பட்ட குடிநீர் லாரியால் தான் சிறுமி இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, பீக் ஹவர்ஸ் நேரத்தில் தனியார் குடிநீர் லாரியை அனுமதித்ததற்காக, செம்பியம் போக்குவரத்து காவல் துறை ஆய்வாளர் சுடலைமணி, பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கனரக வாகனங்கள் இயக்கத்தை அவ்வப்போது ஆய்வு செய்யாமல் அலட்சியமாக இருந்த சென்னை காவல் துறை, சிறுமி இறந்த பின், உஷார் நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதாவது, குடிநீர், கழிவுநீர் லாரிகள், காஸ் சிலிண்டர் வாகனங்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள், பீக் ஹவர்ஸ் நேரங்களில் சென்னைக்குள் நுழைய, நேற்று காலை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளில், பீக் ஹவர்ஸ் நேரங்களில் இயக்கப்பட்ட 1,000 கனரக வாகனங்கள், ஆங்காங்கே சிறைபிடிக்கப்பட்டன. பீக் ஹவர்ஸ் முடித்த பின், அனைத்து வாகனங்களும் விடுவிக்கப்பட்டன.
இதுகுறித்து உதவி கமிஷனர் கூறியதாவது:
சென்னையில் காலை 7:00 மணி முதல் 12:00 மணி வரை; மாலை, 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, சென்னை நகருக்குள் கனரக வாகனங்கள் இயக்க அனுமதி கிடையாது.
கனரக வாகனங்களை தடுக்க தவறி, விபத்து ஏதேனும் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட பகுதி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்படுவதோடு, உதவி கமிஷனர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். விபத்து ஏற்படும் கனரக வாகனங்கள், 100 நாட்கள் விடுவிக்கப்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதேபோல், தடை விதிக்கப்பட்ட நேரத்தில், ஜி.எஸ்.டி., சாலை வழியாக குரோம்பேட்டைக்குள் நுழைந்த கனரக வாகனங்கள் மடக்கப்பட்டன. அந்த வகையில் வேன், டிப்பர் லாரி உள்ளிட்ட 14 கனரக வாகனங்களுக்கு, போலீசார் 25,000 ரூபாய் அபராதம் வசூலித்தனர்.