ADDED : மே 09, 2025 03:37 AM
சென்னை:துாத்துக்குடி மாவட்டத்தில், மத்திய அரசின் நெய்வேலி நிலக்கரி நிறுவனம், தமிழக மின் வாரியம் இணைந்து, என்.டி.பி.எல்., பெயரில், கூட்டு அனல் மின் நிலையத்தை அமைத்துள்ளன. அங்கு தலா, 500 மெகா வாட் திறனில், இரு அலகுகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
அதிலிருந்து தமிழகத்திற்கு தினமும், 410 மெகா வாட் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதி மின்சாரம், பிற மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. என்.டி.பி.எல்., மின் நிலையத்தின் இரண்டாம் அலகில் பழுது காரணமாக, இம்மாதம், 2ம் தேதி முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, என்.டி.பி.எல்., மின் நிலையத்தில் பணிபுரியும், 1,000க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், முதல் அலகில் சாம்பல் வெளியேற்றும் பிரிவில் ஏற்பட்டுள்ள பிரச்னையால், நேற்று இரவு முதல் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், என்.டி.பி.எல்., மின் நிலையத்தில் இருந்து, தமிழகத்திற்கு மின்சாரம் வழங்குவது முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளது.