ADDED : பிப் 20, 2024 12:47 AM
தாம்பரம், வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, தாம்பரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விற்பனை செய்வோர் கண்டறியப்பட்டு, கைது செய்யப்படுகின்றனர். அந்த வகையில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று, மறைமலை நகர், மகேந்திர சிட்டி அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரித்தனர்.
அதில், ஒடிசாவைச் சேர்ந்த பட்டு குளோரி, 40, அக்ரம் பத்ரா, 28, என்பது தெரியவந்தது. அவர்களது உடைமைகளை சோதனை செய்ததில், 10.40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 104 கிலோ கஞ்சா சிக்கியது. மேலும், ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, தாம்பரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கல்லுாரி மாணவர்கள் மற்றும் சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த மதுவிலக்கு பிரிவு போலீசார், இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

