/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விமானத்தில் கோளாறு 109 பேர் உயிர் தப்பினர்
/
விமானத்தில் கோளாறு 109 பேர் உயிர் தப்பினர்
ADDED : அக் 20, 2025 04:36 AM
சென்னை: சென்னையில் இருந்து பெங்களூரு புறப்பட்ட 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' பயணியர் விமானத்தில் ஏற்பட்ட திடீர் இயந்திர கோளாறு காரணமாக, சென்னை விமான நிலையத்தில், நேற்று பரபரப்பு ஏற்பட்டது. 109 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணியர் விமானம், நேற்று காலை 10:45 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப் பட தயாரானது.
விமானத்தில், 104 பயணியர், ஐந்து விமான ஊழியர்கள் உட்பட, 109 பேர் இருந்தனர். விமானம், ஓடு பாதையில் ஓடத்துவங்கிய போது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதை, விமானி கண்டு பிடித்தார்.
இதை அடுத்து, விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு கொண்டுவரப்பட்டது.
விமான பொறியாளர் குழுவினர், விமானத்தில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
பயணியர் அனைவரும், விமானத்துக்கு உள்ளேயே அமர வைக்கப்பட்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, விமான பொறியாளர்கள் முயற்சி மேற்கொண்டு, அதில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை சரிசெய்தனர். பின், 1:15 மணி நேரம் தாமதமாக, பகல் 12:00 மணிக்கு விமானம் புறப்பட்டது.
அந்த விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை, விமானம் வானில் பறப்பதற்கு முன்னதாகவே, விமானி தகுந்த நேரத்தில் கண்டு பிடித்து எடுத்த துரித நடவடிக்கை காரணமாக, விமானம் ஆபத்தில் இருந்து தப்பியதோடு, விமானத்தில் இருந்த 104 பயணியர் உட்பட 109 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.