/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆந்திரா கஞ்சா கடத்தல் மூவருக்கு தலா '12 ஆண்டு'
/
ஆந்திரா கஞ்சா கடத்தல் மூவருக்கு தலா '12 ஆண்டு'
ADDED : அக் 20, 2024 12:24 AM
சென்னை, ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு, காரில் கஞ்சா கடத்தி வருவதாக, 2022 ஏப்., 30ல், சென்னை யானைக்கவுனி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வால்டாக்ஸ் சாலையில் வாகன சோதனை நடத்தினர். அவ்வழியே வந்த சென்னை பதிவெண் உடைய தங்க நிற 'டாடா சுமோ கிராண்டி' காரை நிறுத்தி சோதனையிட்டனர்.அதில், சாக்கு பைகளில், மொத்தம் 60 கிலோ எடையுள்ள, கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
விசாரணையில், காரில் இருந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன்குமார், 41, ஸ்டான்லி, 26, ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியைச் சேர்ந்த பேரூரி சீனு, 33, ஆகியோர், ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்தது தெரித்தது. போலீசார் அவர்களை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
போதை பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற முதன்மை நீதிபதி சி.திருமகள் முன், வழக்கு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, 'மோகன்குமார் உட்பட மூவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே, அவர்களுக்கு தலா 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், அபராதமாக மொத்தம் 6.30 லட்சம் ரூபாயும் விதிக்கப்படுகிறது' என தீர்ப்பளித்தார்.