/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
13 செ.மீ., மழையால் ஆவடியில் கடும் பாதிப்பு
/
13 செ.மீ., மழையால் ஆவடியில் கடும் பாதிப்பு
ADDED : செப் 27, 2024 01:00 AM

சென்னை மற்றும் புறநகர் பகுதியில், நேற்று முன்தினம் இரவு பெய்த தொடர் மழையால், நகரில் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன.
கொரட்டூர் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் மழைநீர் தேங்கியதால், நோயாளிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். மருத்துவமனை வளாகத்திற்குள் செல்ல, செங்கலால் பாதை அமைத்து, கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆவடி அடுத்த சேக்காடில் 13 அடி உயர சுரங்கப்பாதை முழுதும், மழைநீர் தேங்கி போக்குவரத்து தடை செய்யப்பட்டது. வாகன ஓட்டிகள் 4 கி.மீ., சுற்றி பட்டாபிராம், தண்டுரை வழியாக, சுற்று வட்டார பகுதிகளுக்கு சென்று வந்தனர். நான்கு எச்.பி., மோட்டார்கள் வாயிலாக, சுரங்கப்பாதை தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதேபோல், பட்டாபிராம், சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு, பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
ஆவடியில் பருத்திப்பட்டு ஏரி, அயப்பாக்கம் ஏரியில் கொள்ளளவை எட்டிய நிலையில், கலங்கல் வாயிலாக 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
திருநின்றவூர் நகராட்சியில் பெரியார் நகர், பாரதிதாசன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. பெரம்பூர் பேருந்து நிலையத்தில் மழைநீர், குளம் போல் தேங்கியிருந்தது.
அண்ணா நகர் மண்டலத்தில், சாந்தி காலனி ஐந்தாவது அவென்யூவில் மழைநீர் தேங்கியதால், அப்பகுதியினர் கடும் இன்னல்களுக்கு உள்ளாகினர்.
ஆவடியில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில், நேரடியாக கள ஆய்வு செய்யப்பட்டு, மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அடுத்த கன மழைக்கு, சேக்காடு சுரங்கப்பாதையில் வெள்ளம் தேங்காமல் இருக்க தற்காலிகமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். ஒரே நேரத்தில் அதிகபட்ச மழை பெய்யும் போது, வெள்ளம் தேங்குவதை தவிர்க்க முடியாது. ஆனால் அவற்றை வடிய செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரபுசங்கர்,
கலெக்டர், திருவள்ளூர்
வடிகால் இருந்தும் வீண்
எந்த ஆண்டும் இல்லாதவகையில், கடந்த பருவமழையின் போது, அண்ணா நகரில் மழைநீர் தேங்கியது. அதேபோல், இந்தாண்டும் பாதிக்கப்படுமோ என அச்சம் நிலவுகிறது. இந்த சாதாரண மழைக்கே, அண்ணா நகரில் சில இடங்களில் மழைநீர் தேங்கியது. வடிகால்கள் இருந்தும் பயனில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஸ்ரீகாந்த்,
அண்ணா நகர்
- நமது நிருபர் குழு -