/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீடு ஒப்படைக்க 14 ஆண்டு தாமதம் வட்டியுடன் பணத்தை தர உத்தரவு
/
வீடு ஒப்படைக்க 14 ஆண்டு தாமதம் வட்டியுடன் பணத்தை தர உத்தரவு
வீடு ஒப்படைக்க 14 ஆண்டு தாமதம் வட்டியுடன் பணத்தை தர உத்தரவு
வீடு ஒப்படைக்க 14 ஆண்டு தாமதம் வட்டியுடன் பணத்தை தர உத்தரவு
ADDED : ஏப் 09, 2025 12:17 AM
சென்னை, வீடு ஒப்படைக்க, 14 ஆண்டுகள் தாமதித்த கட்டுமான நிறுவனம், பாதிக்கப்பட்ட இருவருக்கு தலா 13 லட்ச ரூபாயை, வட்டியுடன் திருப்பித்தர, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பழைய மாமல்லபுரம் சாலையில், தாழம்பூர் கிராமத்தில், 'ஸ்ரீ விக்னேஷ் பில்டர்ஸ்' நிறுவனம் சார்பில் குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் வீடு வாங்க, பி. சவுந்தரராஜன், எஸ்.சி. சகுந்தலராஜ் ஆகியோர், தனித்தனியாக, 2010ல் ஒப்பந்தம் செய்தனர்.
இதன்படி, இவர்கள் இருவரும், தலா 13 லட்ச ரூபாயை செலுத்தினர். இவர்களுக்கு, 2012ல் வீட்டை ஒப்படைப்பதாக கட்டுமான நிறுவனம் உறுதி அளித்து இருந்தது. ஆனால், 14 ஆண்டுகள் தாமதமான நிலையில், இன்னும் கட்டுமான பணிகள் முடியவில்லை.
இதன் அடிப்படையில் சவுந்தரராஜன், சகுந்தலராஜ் ஆகியோர் ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகார்கள் குறித்து ஆணையத்தின் தலைவர் ஷிவ்தாஸ் மீனா தலைமையிலான அமர்வு விசாரித்து, தனித்தனியாக பிறப்பித்த உத்தரவு:
இரண்டு வழக்குகளிலும், ஒரே நிறுவனம் தான் சம்பந்தப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலத்தில், அந்நிறுவனம் வீட்டை ஒப்படைக்கவில்லை என்பது உறுதியாகிறது.
இந்த வழக்குகளில் நோட்டீஸ் அளித்தும், கட்டுமான நிறுவனம் தரப்பில் பதில் அளிக்கவில்லை. எனவே, மனுதாரர்கள் இருவரும் தனித்தனியாக செலுத்திய, 13 லட்ச ரூபாயை, வட்டியுடன் சேர்த்து கட்டுமான நிறுவனம் அளிக்க வேண்டும்.
இத்துடன் வழக்கு செலவுக்காக இரண்டு பேருக்கும், தலா 25,000 ரூபாயை கட்டுமான நிறுவனம் அளிக்க வேண்டும். அந்த குறிப்பிட்ட திட்டத்தை உடனடியாக ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.