/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
14ம் நுாற்றாண்டு கல்வெட்டு சென்னையில் கண்டெடுப்பு
/
14ம் நுாற்றாண்டு கல்வெட்டு சென்னையில் கண்டெடுப்பு
ADDED : அக் 17, 2025 12:39 AM

சென்னை: சென்னை, கோட்டூர்புரம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் 14ம் நுாற்றாண்டைச் சேர்ந்த முழுமையடையாத கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மணியன் கலியமூர்த்தி தலைமையில், தொல்லியல் ஆய்வாளர்கள் சங்கத்தினர் சென்னை, கோட்டூர்புரம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் சுற்றுச்சுவர், கருவறை உள்ளிட்ட இடங்களில் கல்வெட்டுகளை தேடினர். அங்கு, முற்றுப்பெறாத கல்வெட்டு இருப்பதை கண்டறிந்தனர்.
இதுகுறித்து, மணியன் கலியமூர்த்தி கூறியதாவது:
சென்னை, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தின் எதிரில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலின் கொடிமரம், உண்ணாழிகை எனும் கருவறை வடக்கு வெளிப்புற அதிட்டானத்தில் துண்டு கல்வெட்டுகள் இருப்பதை கள ஆய்வில் கண்டறிந்தோம்.
அவற்றை, தமிழக தொல்லியல் துறை முன்னாள் துணை இயக்குநர் ராமமூர்த்தியின் முன்னிலையில் படியெடுத்தோம்.
கொடிமரத்தின் கண்டம் பகுதியில், 'செயங்கொண்ட தொண்டை மண்டலத்து' என்ற ஒரு வரி கல்வெட்டையும், கருவறை வடக்கு அதிட்டானத்தில் வராகன் பணம் தானமாக கொடுக்கப்பட்ட தகவல், நான்கு வரிகளில் உள்ளது. மேலும் வரிகள் மண்ணில் புதைந்திருக்கலாம்.
'வராகன்' என்ற பொற்காசுகள் விஜயநகர அரசர்களின் ஆட்சி காலத்தில் புழக்கத்தில் இருந்தன. அதையும், இதில் உள்ள எழுத்தமைதியையும் வைத்துப் பார்க்கும்போது, இது, 13 - 14ம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.
'செயங்கொண்ட தொண்டை மண்டலத்து' என்ற சொல், சோழர்களுக்குப்பின் தமிழகத்தை ஆண்ட பாண்டியர்களின் ஆட்சி காலத்தில், படைவீடு, காஞ்சிபுரம், விரிஞ்சிபுரம் பகுதிகளை உள்ளடக்கிய பகுதி செயங்கொண்ட தொண்டை மண்டலம் என்ற பெயரில் இருந்தது.
இந்த கோவில், அப்போதைய சம்புவராயர்களின் ஆட்சியில் கட்டப்பட்டதாக இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.