ADDED : ஜன 20, 2024 11:37 PM

அண்ணா நகர், அண்ணா நகரை சுற்றியுள்ள அமைந்தகரை, ஷெனாய் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கோக்கைன் போதை பொருள் விற்பதாக அண்ணாநகர் துணை கமிஷனருக்கு தகவல் கிடைத்தது.
தகவல் அடிப்படையில், செனாய் நகர் பகுதியில் போதை பொருளை பயன்படுத்தியவரை பிடித்து, தனிப்படை போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், குன்றத்துார் அடுத்த, மணிமங்கலம் பகுதியில் உள்ள வீட்டிலிருந்து, கோக்கைன் கிடைத்தது தெரிந்தது
போலீசார் அதிரடியாக அந்த வீட்டை ஆய்வு செய்ததில், நைஜீரியா நாட்டை சேர்ந்த சினெடு ஒனோச்சி, 47 என்பவர் தங்கியிருந்து, கோக்கைன் விற்பனை செய்தது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து, 1 கிலோ கோக்கைன் போதை பொருளை பறிமுதல் செய்தனர்.
அவரின் அளித்த தகவலின் படி, பள்ளிக்கரணை அருகே விற்பனைக்காக, 250 கிராம் கோக்கைன் வைத்திருந்த மற்றொரு நைஜீரியர் அமே சியோன் இனலெக்வு, 39, என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
இருவரிடம் இருந்தும், 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான, 1.250 கிலோ கோக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது.
பெங்களூரில் இருந்து கோக்கைனை வாங்கி வந்து, சென்னையில் பல்வேறு இடங்களில் விற்றது விசாரணையில் தெரியவந்தது.
இருவரும் தமிழ் சினிமாவில் துணை நடிகர்களாக நடித்துள்ளதாகவும் தெரிந்தது. இவர்களுடன் தொடர்பு உள்ளவர்களை விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

