/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
150 கடலாமைகள் பலி :நீரோட்ட மாற்றம் காரணம்?
/
150 கடலாமைகள் பலி :நீரோட்ட மாற்றம் காரணம்?
ADDED : ஜன 01, 2026 04:38 AM
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், ஒரு மாதத்தில் 150 கடலாமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. கடல் நீரோட்ட மாற்றம் இதற்கு காரணமா என, வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தமிழக கடலோர பகுதிகளில், 'ஆலிவ் ரிட்லி' வகை கடலாமைகள் அதிகமாக காணப்படுகின்றன. இவை, ஆண்டு தோறும், டிச., முதல் ஏப்., மாதம் வரை, கரைக்கு வந்து முட்டையிடும்.
இந்த முட்டைகளை சேகரித்து பாதுகாப்பதற்கான நடவடிக்கையில் வனத்துறை, தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு இதே காலத்தில், முட்டையிட கரைக்கு வரும் கடலாமைகள் இறந்து கரை ஒதுங்கின. கடந்த ஆண்டு, 1,200க்கும் மேற்பட்ட கடலாமைகள் இறந்தன.
இது, வனத்துறைக்கு பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியது. தலைமை செயலர் தலைமையில், உயரதிகாரிகள் அடங்கிய பணிக்குழு அமைக்கப்பட்டது. மேலும், கடலாமைகள் பாதுகாப்புக்கு, உயர் சிறப்பு படையும் அமைக்கப்பட்டது.
நடப்பு ஆண்டுக்கான கடலாமைகள் முட்டையிடும் சீசன், டிச., முதல் வாரத்தில் துவங்கிய நிலையில், ஒற்றை இலக்கத்தில் துவங்கிய கடலாமைகள் இறப்பு தற்போது, ஒரு நாளைக்கு, 12 வரை அதிகரித்துள்ளது.
இந்த மாதத்தில் இதுவரை, 150க்கும் மேற்பட்ட கடலாமைகள் இறந்து கரை ஒதுங்கியதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மீன்பிடி வலையில் சிக்கும் கடலாமைகளை விடுவிப்பது குறித்து, மீனவர்களுக்கு பயிற்சி அளித்து இருக்கிறோம். குறிப்பிட்ட சில இடங்களில், சுருக்கு மடி வலை பயன்படுத்த தடை விதிக்கப் பட்டுள்ளது. இருப்பினும் கடலாமைகள் இறப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடல் நீரோட்ட மாற்றம் இதற்கு காரணமாக இருக்குமா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

