/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தண்டையார்பேட்டையில் 1,700 ஆக்கிரமிப்பு அகற்ற 'கெடு'
/
தண்டையார்பேட்டையில் 1,700 ஆக்கிரமிப்பு அகற்ற 'கெடு'
தண்டையார்பேட்டையில் 1,700 ஆக்கிரமிப்பு அகற்ற 'கெடு'
தண்டையார்பேட்டையில் 1,700 ஆக்கிரமிப்பு அகற்ற 'கெடு'
ADDED : அக் 27, 2024 12:22 AM

சென்னை, தண்டையார்பேட்டை யில், குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் அருகில் உள்ள, 1,700 ஆக்கிரமிப்புகளை எட்டு வாரங்களில் அகற்ற, உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
தண்டையார்பேட்டை துாயமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனு:
தண்டையார்பேட்டை வ.உ.சி., நகரில், குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டவர்களில் பலர், அங்கிருந்து சென்று விட்டனர். தற்போது, அங்கு வசிப்பவர்கள் பெரும்பாலானோர், சட்டவிரோதமாக உள்ளனர்.
குடியிருப்புகள் யாருக்கு ஒதுக்கப்பட்டதோ, அவர்கள், வேறு யாருக்கும் அதை விற்கக் கூடாது. சட்டவிரோதமாக இருப்பவர்களை அங்கிருந்து அகற்றுவதற்குப் பதில், அதிகாரிகளும் துணை போகின்றனர்.
சட்டவிரோதமாக குடியிருப்பவர்கள், அருகில் உள்ள நிலத்தை ஆக்கிரமித்து கட்டுமானங்கள் எழுப்பி உள்ளனர். இதற்கு, அரசின் அனுமதியை பெறவில்லை. எனவே, வ.உ.சி., நகரில் உள்ள குடிசைமாற்று வாரிய, எல்.ஐ.ஜி., பிளாக்கில் வசிப்பவர்களால் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஆர்.சுப்புராஜ் ஆஜரானார். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், வழக்கறிஞர் பி.பாலாஜி; அரசு தரப்பில், அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆஜராகினர். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
சிதிலமடைந்த கட்டடங்கள் என்பதால், அவற்றை இடித்து விட்டு மீண்டும் கட்டும் திட்டம் இருந்ததால், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற முடியவில்லை என்றும், குடியிருப்புவாசிகள் காலி செய்ய மறுத்ததால், திட்டம் அமலுக்கு வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. வாரியத்தின் மனுவைப் பார்க்கும்போது, ஆக்கிரமிப்புகள் இருப்பது உறுதியாகிறது. அருகில் உள்ள இடங்களை, குடியிருப்பவர்கள் ஆக்கிரமித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
கடந்த 2022ல், 1,700 ஆக்கிரமிப்புகள் இருந்துள்ளது. தற்போது எந்த அளவுக்கு ஆக்கிரமிப்புகள் இருக்கும் என்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. 2022 பிப்ரவரியிலேயே ஆக்கிரமிப்புகள் இருப்பது தெரிந்தும், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது, கடமை தவறியது மட்டுமின்றி, அலட்சிய தன்மையையும் காட்டுகிறது.
எனவே, ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக உடனடியாக, அதிகாரிகள் செயல்பட வேண்டும். எட்டு வாரங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற, உரிய எண்ணிக்கையில் போலீசாரை பணியமர்த்தி, சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் உறுதி செய்வதற்கு, மாநகர போலீஸ் ஆணையர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.