ADDED : நவ 11, 2025 12:43 AM
ஆவடி: ஆவடி மாநகராட்சி பகுதிகளில், சாலையில் திரிந்த 18 மாடுகள் நேற்று சிறைபிடிக்கப்பட்டன.
ஆவடி மாநகராட்சியில், சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். இது குறித்து, மாடு வளர்ப்போருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், சாலையில் மாடுகள் மேய்ந்து வருவது குறையவில்லை.
தற்போது, கடந்த மே முதல், தனியார் அமைப்புடன் சேர்ந்து மாடு பிடிக்கும் பணியை, ஆவடி மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், நேற்று அதிகாலை, தண்டுரை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, நேரு பஜார் சாலை உள்ளிட்ட பகுதிகளில், சாலையில் சுற்றித்திரிந்த, 18 மாடுகள் பிடிக்கப்பட்டு, காஞ்சிபுரத்தில் உள்ள மாடுகளை பராமரிக்கும் இடமான கோசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்த ஆண்டு, இதுவரை, 155 மாடுகள் பிடிக்கப்பட்டு, 3.68 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் தொடர்ந்து நடைபெறும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

