/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாதவரத்தில் நிலத்தடி நீர்மட்டம் 19 அடி உயர்வு: கை கொடுத்தது தென்மேற்கு பருவமழை
/
மாதவரத்தில் நிலத்தடி நீர்மட்டம் 19 அடி உயர்வு: கை கொடுத்தது தென்மேற்கு பருவமழை
மாதவரத்தில் நிலத்தடி நீர்மட்டம் 19 அடி உயர்வு: கை கொடுத்தது தென்மேற்கு பருவமழை
மாதவரத்தில் நிலத்தடி நீர்மட்டம் 19 அடி உயர்வு: கை கொடுத்தது தென்மேற்கு பருவமழை
UPDATED : நவ 15, 2024 07:20 AM
ADDED : நவ 15, 2024 01:33 AM

சென்னையின் மக்கள் தொகையும், கட்டடங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதால், குடிநீர் தேவையும் உயர்ந்துள்ளது.
ஏரிகள் மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து, தினமும், 100 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. விரிவாக்க பகுதிகளில் லாரிகள் வாயிலாக குடிநீர் வினியோகம் நடக்கிறது.
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, மழைநீர் சேகரிப்பில் தொலைநோக்கு பார்வை இல்லாதது, நீர்வழி கட்டமைப்புகளை முறையாக பராமரிக்காதது போன்ற காரணங்களால், நிலத்தடிநீர் போதிய அளவு பூமிக்குள் தங்குவதில்லை. சென்னை மாநகராட்சி, மணல், களிமண், பாறை போன்ற அடுக்குகளை கொண்ட நிலப்பரப்பு. நிலத்தடிநீர் மட்டத்தை கணக்கிட, 200 வார்டிலும், நிலத்தடி நீர் அளவுமானிகள் உள்ளன.
வடகிழக்கு பருவமழை, 2022ல் 92 செ.மீ., பதிவானது. கடந்த 2023ல் 18 சதவீதம் கூடுதலாக, 109 செ.மீ., பெய்தது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை, கடந்த ஆண்டுகளைவிட அதிகமாக பெய்தது. சென்னையில் ஜூனில் வழக்கமாக, 6.6 செ.மீ., மழை பெய்யும். கடந்த ஜூனில், 200 சதவீதம் அதிகரித்து, 20 செ.மீ., மழை பெய்தது. செப்., 30ம் தேதி வரை, வழக்கத்தைவிட அதிகமாக மழை பொழிவு இருந்தது.
இதனால், கடந்த ஆண்டுகளைவிட நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. ஆக., - செப்., - அக்., மாதங்களில், படிப்படியாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. மாதவரத்தில், ஆகஸ்டில் 37 அடி ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர்மட்டம், அக்டோபரில், 18.5 அடியாக உயர்ந்து, 19 அடி ஆழத்தில் உள்ளது.
அம்பத்துாரில், 9 அடியாகவும், இதர மண்டலங்களில், 3 - 6 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மாநகராட்சியை மொத்தமாக கணக்கிடும்போது, 2022, 2023, 2024ம் ஆண்டில் படிப்படியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் அனைத்து மண்டலங்களிலும், தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்தது. ஒரே அடியாக இல்லாமல், அவ்வப்போது பெய்ததால், வறட்சி நிலத்தில் ஈரப்பதம் அதிகரித்தது. அடுத்தடுத்த பெய்த மழைகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது.
மூன்று மாதங்களில் அடுத்தடுத்த நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது, இந்த ஆண்டில் தான் நடந்துள்ளது. வடகிழக்கு பருவமழை அதிகமாக இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், சென்னையின் நிலத்தடி நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.