/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.2 கோடி ஆந்திர கஞ்சா கடத்திய 2 பேர் கைது
/
ரூ.2 கோடி ஆந்திர கஞ்சா கடத்திய 2 பேர் கைது
ADDED : அக் 17, 2025 12:28 AM

சென்னை: ஆந்திராவில் இருந்து, பொருட்கள் ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனங்களில் ரகசிய அறை அமைத்து, 2 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா கடத்திய இருவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
ஆந்திரா வழியாக செல்லும் சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள காரனோடை சுங்கச்சாவடியில், என்.சி.பி., எனும் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார், நேற்று சோதனை நடத்தினர்.
அப்போது, தமிழக பதிவு எண்களுடன், நீளமான தகரத்தை ஏற்றி வந்த, 'அசோக் லேலண்ட்' என்ற சிறிய ரக சரக்கு வாகனம் மீது, என்.சி.பி., போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். தகரத்தை இறக்கி பார்த்தபோது, அது வெற்று வாகனம் போலத்தான் இருந்துள்ளது. ஆனால், அதன் அடிப்பகுதியில் மிகவும் நேர்த்தியாக ரகசிய அறை அமைத்து, 2 கோடி ரூபாய் மதிப்புள்ள, 350 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.
தொடர் விசாரணையில், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது, காஞ்சிபுரம் மாவட்டம், கெருகம்பாக்கம் லீலாவதி நகரைச் சேர்ந்த அப்துல் இப்ராஹிம், 58, திருவள்ளூர் மாவட்டம், அம்பத்துார் கங்கை நகரைச் சேர்ந்த மதன்பாபு, 29, என்பது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் நேற்று கைது செய்து, கஞ்சா மற்றும் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
வாகனத்தின் பதிவு எண் மற்றும் சுங்கச்சாவடிகளை கடக்க பயன்படுத்தப்படும் 'பாஸ்டேக்' ஸ்டிக்கர் போலியானவை என போலீசார் தெரிவித்தனர்.