/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அனைத்து பகுதிகளுக்கும் பஸ் கேட்ட எம்.எல்.ஏ.,வை கலாய்த்த சபாநாயகர்
/
அனைத்து பகுதிகளுக்கும் பஸ் கேட்ட எம்.எல்.ஏ.,வை கலாய்த்த சபாநாயகர்
அனைத்து பகுதிகளுக்கும் பஸ் கேட்ட எம்.எல்.ஏ.,வை கலாய்த்த சபாநாயகர்
அனைத்து பகுதிகளுக்கும் பஸ் கேட்ட எம்.எல்.ஏ.,வை கலாய்த்த சபாநாயகர்
ADDED : அக் 17, 2025 12:28 AM
சென்னை: சென்னை, பெரம்பூரில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் செல்வதற்கு, 'பஸ் ரூட்' கேட்ட எம்.எல்.ஏ.,வை, சபாநாயகர் அப்பாவு கிண்டலடித்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
தி.மு.க., - தாயகம் கவி: கருணாநிதி முதல்வராக இருந்தபோது, 1972ம் ஆண்டு பெரம்பூர் பேருந்து நிலையம் கட்டப்பட்டது.
இங்கிருந்து, ரெட்டேரி வழியாக பெரியபாளையம், சோழிங்கநல்லுார், திருவொற்றியூர், பொன்னேரி, சாந்தோம், மெரினா, ஈஞ்சம்பாக்கம், கோவளம் ஆகிய இடங்களுக்கு, மாநகர பேருந்துகளை இயக்க வேண்டும்.
சபாநாயகர் அப்பாவு: ஒரே நேரத்தில், 20 ரூட் சொன்னால் எப்படி, அமைச்சர் மைண்டில் வைத்து செய்வார்; உங்களுக்கு ஞாபக சக்தி அதிகம் என தெரியும். முக்கியமான ஒன்று, இரண்டை கேளுங்கள்.
தாயகம் கவி: பெரம்பூரில் இருந்து அம்பத்துார், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார், பெருங்களத்துார், மறைமலைநகருக்கும் பேருந்துகளை இயக்க வேண்டும்.
எழும்பூர் வழியாக அண்ணாசாலை செல்லும் பேருந்தை புதிதாக மாற்றி தர வேண்டும்.
சபாநாயகர் அப்பாவு: பெரம்பூரை பாயின்ட்டாக வைத்து, தமிழகம் முழுதும் பஸ் இயக்க வேண்டும் என கேட்கிறார்; அமைச்சர் செய்து தர வேண்டும்.
தாயகம் கவி: பெரம்பூரில் இருந்து கீழ்ப்பாக்கம், மதுரவாயல், திருவேற்காடு செல்லும் பழைய பேருந்துகளையும் புதிதாக மாற்ற வேண்டும்.
சபாநாயகர் அப்பாவு: பெரம்பூரில் இருந்து ராதாபுரத்திற்கு பேருந்து கேட்காமல் விட்டு விட்டீர்கள்.
அமைச்சர் சிவசங்கர்: கோவில் செல்வதற்கு பெரியபாளையத்திற்கும், வேலைக்கு செல்வதற்கு சோழிங்கநல்லுாருக்கும், சுற்றுலாவுக்கு மெரினா கடற்கரைக்கும் செல்வதற்கு ஒரே கோர்வையாக பேருந்து இயக்க கேட்டுள்ளார்.
மாநகர பேருந்துகளை குறிப்பிட்ட தொலைவிற்கு மட்டுமே இயக்க முடியும். அதற்கேற்ப இந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். புதிய பேருந்துகள் வாங்கப்படுகின்றன.
அவை வந்ததும், பழைய பேருந்துகள் மாற்றி தரப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.