/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பயணியரிடம் போன் திருட்டு சென்ட்ரலில் 2 பேர் கைது
/
பயணியரிடம் போன் திருட்டு சென்ட்ரலில் 2 பேர் கைது
ADDED : ஏப் 09, 2025 12:12 AM
சென்னை, உத்தரபிரதேசம் மாநிலம், குஷிநகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகலாத் சிங் மகன் சிவம் சிங் 18. இவர், கடந்த 6ம் தேதி, சென்ட்ரலில் உள்ள பயணியர் காத்திருப்பு அறையில், தனது மொபைல் போனை சார்ஜ் போட்டுவிட்டு, இருக்கையில் அமர்ந்திருந்தார்.
சிறிது நேரம் கழித்து பார்த்த போது, மொபைல் போன் காணாமல் போனது தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், ரயில்வே போலீசில் புகார் அளித்தார்.
இதேபோல், கரூரைச் சேர்ந்த கார்த்திக் என்ற பயணியும், தனது மொபைல் போன் திருடு போனது தொடர்பாக புகார் அளித்திருந்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை தேடி வந்தனர். காத்திருப்போர் அறையில் இருந்த 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்துபோது, மொபைல் போனை ஒருவர் திருடி செல்வது தெரியவந்தது.
இந்நிலையில், அந்த நபர் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு, நேற்று முன்தினம் இரவு மீண்டும் வந்தபோது, அவரை ரயில்வே போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், திருவள்ளூர் மாவட்டம், ஒதிகாடு கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார், 32, என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து, நான்கு மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கார்த்திக் என்ற பயணியிடம் மொபைல் போன் திருடியது தொடர்பாக, தேனி மாவட்டம், போடிநாயக்கனுார் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாண்டியராஜ், 39, என்பவரை, ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்த மொபைல் போனை பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

