/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிரசவித்த 2 தாய், 2 குழந்தை பலி: உறவினர்கள் கொதிப்பு சென்னை, புறநகரில் அதிர்ச்சி
/
பிரசவித்த 2 தாய், 2 குழந்தை பலி: உறவினர்கள் கொதிப்பு சென்னை, புறநகரில் அதிர்ச்சி
பிரசவித்த 2 தாய், 2 குழந்தை பலி: உறவினர்கள் கொதிப்பு சென்னை, புறநகரில் அதிர்ச்சி
பிரசவித்த 2 தாய், 2 குழந்தை பலி: உறவினர்கள் கொதிப்பு சென்னை, புறநகரில் அதிர்ச்சி
ADDED : டிச 11, 2024 12:11 AM

சென்னை,சென்னை மற்றும் புறநகர் மருத்துவமனைகளில், பிரசவித்த இரண்டு தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம், பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்கள், 'மருத்துவர்களின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம்' என, மருத்துவமனைகளை முற்றுகையிட்டனர்.
குரோம்பேட்டை அடுத்த திருநீர்மலை வைத்தியகார தெருவைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி சரண்யா, 34; உணவுப்பொருள் வழங்கல் துறை, கோபாலபுர சரக மேலாளர். இரண்டாவது முறையாக கர்ப்பமான சரண்யா, சேலையூர் அடுத்த ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள, 'நியூ லைப்' என்ற தனியார் மருத்துவமனையில், நேற்று முன்தினம் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை தந்தை மோகன்ராஜிடம் மருத்துவர்கள் காண்பித்துள்ளனர். அப்போது, மனைவியை பார்க்க வேண்டும் என மோகன்ராஜ் கேட்டதாகவும், அதற்கு மருத்துவர்கள் காலம் தாழ்த்தியதாகவும் கூறப்படுகிறது. பின், சரண்யா ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறியுள்ளனர்.
ஆனால், தொடர்ந்து எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. சரண்யாவின் உறவினர்கள், மருத்துவர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, சரண்யா இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
ஆத்திரமடைந்த குடும்பத்தினர் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதனால், நேற்று முன்தினம் இரவு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், 'மருத்துவரின் தவறான சிகிச்சையே சரண்யாவின் இறப்புக்கு காரணம் என்றும், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சரண்யாவின் கணவர் மோகன்ராஜ், சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
மற்றொரு சம்பவம்
ஸ்ரீபெரும்புதுார் அருகே, தென்னேரி அகரம் கிராமம், பள்ளத்தெருவைச் சேர்ந்தவர் நந்தகுமார், 30. இவரது மனைவி ஆர்த்தி, 23. இவர், பிரசவத்திற்காக நேற்று முன்தினம் காலை, சுங்குவார்சத்திரத்தில் உள்ள 'அனிதா' என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, ஆர்த்திக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் மருத்துவர்கள் கண்காணிப்பில் நலமுடன் இருந்த நிலையில், காலை 5:00 மணியளவில், ஆர்த்திக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவ பரிசோதனையில், அவர் உயிரிழந்தது தெரிந்தது. இதனால், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆர்த்தியின் இறப்பிற்கு, 'தனியார் மருத்துவமனையின் கவனக்குறைவே காரணம் என்றும், உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்' எனவும் உறவினர்கள் சுங்குவார்சத்திரம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
செவிலியர் மட்டுமே
கல்பாக்கம் அடுத்த வாயலுாரைச் சேர்ந்தவர் துரைராஜ், 37; ஓட்டுநர். இவரது மனைவி சுஜாதா, 33. தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். 10 ஆண்டுகள் கழித்து கருவுற்ற சுஜாதா, சதுரங்கப்பட்டினத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு ஆலோசனை, சிகிச்சை பெற்று வந்தார். தாயும் சேயும் நல்ல நிலையில் உள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 8ம் தேதி இரவு, 10:15 மணியளவில் பிரசவத்திற்காக சுஜாதாவை அனுமதித்துள்ளனர். மருத்துவர்கள் இல்லாத நிலையில், இரண்டு செவிலியர்கள் மற்றும் உதவியாளர் பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது, சுஜாதாவிற்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, நேற்று காலை, 108 ஆம்புலன்சில், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பிரசவம் இயல்பாக நடந்து, பெண் குழந்தை இறந்து பிறந்துள்ளது.
குழந்தையை அடக்கம் செய்த குடும்பத்தினர், நேற்று காலை, சதுரங்கப்பட்டினம் ஆரம்ப சுகாதார மையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
வட்டார மருத்துவ அலுவலர் கவிதா, சதுரங்கப்பட்டினம் போலீசார் அவர்களிடம் பேச்சு நடத்தினர். பிரசவத்தில் எந்த தவறும் நடக்கவில்லை எனக் கூறி, அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர்.