/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறப்பு எஸ்.ஐ.,யை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு
/
சிறப்பு எஸ்.ஐ.,யை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு
ADDED : ஜன 10, 2025 01:07 AM

சென்னை:வருமான வரித்துறை அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து, ஐந்து ஆண்டுகளாக வழிப்பறியில் ஈடுபட்டு வந்த சிறப்பு எஸ்.ஐ., சன்னி லாய்டை கைது செய்ய, இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜா சிங், 48. இவர், தமிழக காவல் துறையில், இரண்டாம் நிலை காவலராக 1997ல் சேர்ந்தார். சில மாதங்களுக்கு முன், சிறப்பு எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு பெற்று, திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.
திருவல்லிக்கேணி ஓமந்துாரார் அரசு மருத்துவமனை அருகே, பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த, முகமது கவுஸ் என்பவரிடம், 20 லட்சம் ரூபாயை கடந்த ஆண்டு டிச., 16ம் தேதி இரவு பறித்தார்.
சம்பவ இடத்திற்கு, வருமான வரித்துறை கண்காணிப்பாளர் பிரபு, 31; ஆய்வாளர் தாமோதரன், 31, ஊழியர் பிரதீப், 42 ஆகியோரை வரவழைத்து, இது ஹவாலா பணம் எனக்கூறி, அவர்களிடம் ஒப்படைத்தார். வருமான வரித்துறை அதிகாரிகள், முகமது கவுசை விசாரணைக்கு அழைத்து செல்வது போல, காரில் கடத்தி சென்று, 20 லட்சம் ரூபாயை தராமல் விரட்டி விட்டனர்.
இச்சம்பவம் குறித்து, திருவல்லிக்கேணி போலீசார் விசாரித்தனர். விசாரணையில், ராஜா சிங் தலைமையில், வழிப்பறி கும்பல் செயல்படுவது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்தனர்.
தொடர் விசாரணையில், சென்னை சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு எஸ்.ஐ., சன்னி லாய்ட், இந்த கும்பலுடன் இருப்பது தெரியவந்தது. போலீசார் விசாரிப்பதை அறிந்து அவர் தலைமறைவானார். அவரை கைது செய்ய இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

