ADDED : அக் 03, 2024 12:52 AM

சென்னை, பட்டினப்பாக்கத்தில், சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்த, 2 பெண்களை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் கடற்கரை பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று காலை, சம்பவ இடத்தில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, 2 பெண்கள் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இருவரையும் கையும் களவுமாக பிடித்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர்.
இதில் அவர்கள், அதே பகுதியைச் சேர்ந்த புவனேஷ்வரி, 35, ராணி, 36, என்பது தெரிந்தது. தொடர்ந்து இருவரை கைது செய்த போலீசார், 290 மதுபாட்டில்கள், 47,750 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவர் மீதும், ஏற்கனவே மதுபாட்டில் விற்பனை செய்தது தொடர்பாக வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.