/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின் இணைப்பிற்கு லஞ்சம் அரசு ஊழியருக்கு '2 ஆண்டு'
/
மின் இணைப்பிற்கு லஞ்சம் அரசு ஊழியருக்கு '2 ஆண்டு'
ADDED : அக் 20, 2024 12:19 AM
செங்கல்பட்டு, வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்ற இளநிலை உதவியாளருக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து, செங்கல்பட்டு நீதிமன்றம், நேற்று தீர்ப்பளித்தது.
சென்னை, நங்கநல்லுாரைச் சேர்ந்த வெங்கிட்ட நாராயணன் என்பவர், தன் வீட்டிற்கு, ஒருமுனை மின் இணைப்பிலிருந்து, மும்முனை மின் இணைப்பிற்காக, 2010 ஜூலை 3ல் விண்ணப்பித்தார்.
நங்கநல்லுார், கங்கா நகர் மின்வாரிய அலுவலகத்தில், இளநிலை உதவியாளர் வெங்கடேசன் என்பவரிடம் அவர் மனு அளித்தார்.
'மும்முனை இணைப்பு வழங்க, 3,500 ரூபாய் தரவேண்டும்' என, வெங்கடேசன் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத வெங்கிட்ட நாராயணன், இது குறித்து சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய 3,500 ரூபாயை கொடுத்த போது, மறைந்திருந்த போலீசார், வெங்கடேசனை கைது செய்து, வழக்கு தொடுத்தனர்.
இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி ஜெயஸ்ரீ முன்னிலையில் நடந்தது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், வெங்கடேசனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி தீர்ப்பளித்தார்.