/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடிகால் வசதியின்றி நீரில் மூழ்கிய பயிர் 200 ஏக்கர்! மகசூல் போனதால் விவசாயிகள் வேதனை
/
வடிகால் வசதியின்றி நீரில் மூழ்கிய பயிர் 200 ஏக்கர்! மகசூல் போனதால் விவசாயிகள் வேதனை
வடிகால் வசதியின்றி நீரில் மூழ்கிய பயிர் 200 ஏக்கர்! மகசூல் போனதால் விவசாயிகள் வேதனை
வடிகால் வசதியின்றி நீரில் மூழ்கிய பயிர் 200 ஏக்கர்! மகசூல் போனதால் விவசாயிகள் வேதனை
ADDED : அக் 23, 2024 10:52 PM

மணலி :மணலி மண்டலத்தில் வடிகால் வசதியில்லாததால் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர் மற்றும் வாழை, மழைநீரில் மூழ்கி நாசமானதாக, விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால், சென்னையில் எஞ்சியுள்ள விவசாயமும் நாளடைவில் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம் 16வது வார்டு கண்ணியம்மன்பேட்டை, கடப்பாக்கம், ஆண்டார்குப்பம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், 200 ஏக்கர் பரப்பிலான நிலங்களில் விவசாயம் நடக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன், பீர்க்கங்காய், கத்தரி, மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டன. பின் அவை கைவிடப்பட்டு, தற்போது நெல், வாழை மட்டும் தொடர்ச்சியாக பயிரிடப்படுகிறது.
மேலும், கோடை கால சீசன் பயிர்களான முலாம்பழம், கிர்ணி, தர்ப்பூசணி மற்றும் கீரை வகைகள் பயிரிடப்படுவது வழக்கம். இந்த விவசாய நிலங்களுக்கு, கடப்பாக்கம் ஏரி நீரே பிரதானம்.
4 அடியில் மழைநீர்
இந்நிலையில், விவசாய நிலத்தைச் சுற்றியுள்ள, பொன்னேரி நெடுஞ்சாலை மற்றும் ஆண்டார்குப்பம் செக் போஸ்ட் - ரெட்ஹில்ஸ் இணைப்பு சாலைகள், விவசாய நிலத்தைவிட, 4 அடி உயரமாக அமைக்கப்பட்டு உள்ளன. இதனால், விவசாய நிலங்கள் தாழ்வாகிவிட்டது.
இதன் காரணமாக, ஒவ்வொரு மழைக்கும், விவசாய நிலங்களில் தேங்கும் மழைநீர் வடிவதில், பெரும் சிக்கல் நிலவி வருகிறது. வேறு வழியின்றி, அந்த சமயத்தில் மட்டும் தற்காலிக வாய்க்கால் வெட்டி, மழைநீரை வெளியேற்ற வேண்டியுள்ளது.
சமீபத்தில் பெய்த மழைக்கு, 3 முதல் 4 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கி, நெற்பயிர் மூழ்கியுள்ளது. வாழை தோட்டத்தை சூழ்ந்திருக்கும் மழைநீரால், அவை அழுகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
முறையான வடிகால் வசதியில்லாதது, சாலையை உயரமாக அமைத்தது உள்ளிட்ட காரணங்களால், விவசாய நிலங்களில் இருந்து வடிய வழியின்றி மழைநீரில் மூழ்கி, பயிர் நாசமாகிறது.
வேண்டுகோள்
இதே நிலை நீடித்தால், சென்னை மாநகராட்சிக்குள், மணலியில் நடக்கும் விவசாயம், தடம் தெரியாமல் அழிந்து போகும் நிலை ஏற்படலாம்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, கண்ணியம்மன்பேட்டை, கடப்பாக்கம், ஆண்டார் குப்பம் சுற்றுவட்டார விவசாய நிலங்களில் தேங்கும் மழைநீர் வெளியேறும் வகையில், பொன்னேரி நெடுஞ்சாலை - ராஜிவ்காந்தி நகர் அருகேயுள்ள சிறு பாலத்தை அகலப்படுத்த வேண்டும்.
மழைநீர் சிறுபாலம் வழியாக, பொன்னேரி நெடுஞ்சாலை வழியாக பாய்ந்தோடி, வடிகால்கள் வாயிலாக கொசஸ்தலை அல்லது புழல் உபரி கால்வாயில் வெளியேறும் வகையில், கட்டமைப்பு வசதி ஏற்படுத்த வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல், பொன்னேரி அடுத்த பனப்பாக்கம் கிராமத்தில், 350 ஏக்கர் பரப்பில் சம்பா பருவத்திற்கு நெல் பயிரிடப்பட்டு உள்ளது. கடந்த வாரம் பெய்த கனமழையால், நெல் பயிரிடப்பட்டிருந்த விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியது.
விவசாய நிலங்களுக்கு அருகில், பனப்பாக்கம் மேய்க்கால் பகுதியில் இருந்து பழவேற்காடு உவர்ப்பு நீர் ஏரிக்கு செல்லும் கால்வாய் பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் உள்ளது. இதனால், விவசாய நிலங்களில் தேங்கிய மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கியுள்ளது.
விவசாயம் தப்புமா?
ஐந்து ஏக்கரில், நெல், வாழை பயிரிட்டுள்ளேன். மழைநீர் தேங்கியுள்ளதால், செலவு செய்த பணமும் கிடைக்காது. விவசாயம் செய்வதில் ஏற்படும் சிரமத்தால், நிலங்கள் விற்பனை செய்யப்பட்டு, கன்டெய்னர் பெட்டக முனையங்கள், தொழிற்சாலைகளின் கட்டட இடிபாடுகள் கொட்டி மேடேற்றிவிட்டனர். இதனால், தாழ்வான நிலங்களில் தேங்கும் மழைநீர் வெளியேற வழியின்றி, பயிர் அழுகிவிட்டது.
- கே.பத்மநாபன், 54, விவசாயி,
கண்ணியம்மன்பேட்டை, மணலி.
பயிரில் ஆயில் கழிவு
ஒன்பது ஏக்கர் நிலத்தில் 'பாபட்லா' நெல், வாழை பயிரிட்டுள்ளேன். மழையால், விவசாய நிலம் முழுதும் 4 அடிக்கு தண்ணீர் தேங்கியது. ஒரு வாரத்திற்கு மேலாகியும் 2 அடி மட்டுமே வடிந்துள்ளது. முழுதும் வடிய 20 நாட்களுக்கும் மேல் ஆகிவிடும். அதற்குள் பயிர் அழுகிவிடும். மேலும், வெள்ள பாதிப்பு ஏற்படும் போது, மழைநீருடன் ஆயில் கழிவுகள் சேர்ந்து தேங்குவதால், பயிர் நாசமாகிறது.
-கே.வி.சரவணன், 53, விவசாயி,
மணலி ஆண்டார்குப்பம்.