ADDED : பிப் 23, 2024 12:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, வேப்பம்பட்டு அருகே, 205 கிலோ குட்கா பொருட்களை வேனில் கடத்தி வந்த நபரை, போலீசார் கைது செய்தனர்.
ஆவடி போலீஸ் கமிஷனரகத்திற்கு உட்பட்ட வேப்பம்பட்டு சோதனைச்சாவடியில், போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது,'டாடா இன்ட்ரா' வேன் ஒன்று, சோதனைச்சாவடியில் நிற்காமல் சென்றது.
போலீசார் அந்த வாகனத்தை துரத்திச் சென்று மடக்கி, பின்பக்க கதவை திறந்து சோதனை செய்தனர்.
அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, கூலிப், ஹன்ஸ் பாக்கெட்டுகள் என, 205 கிலோ குட்கா பொருட்கள் இருந்தன.
இவற்றை பறிமுதல் செய்த போலீசார், கடத்தி வந்த திருநின்றவூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்த நவீன்குமார், 33, என்பவரை கைது செய்தனர். மேலும், 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.