/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதை பொருள் கடத்தல் மே மாதத்தில் 288 பேர் கைது
/
போதை பொருள் கடத்தல் மே மாதத்தில் 288 பேர் கைது
ADDED : ஜூன் 04, 2025 12:10 AM
சென்னை, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண், மெத் ஆம்பெட்டமைன், கோகைன் உள்ளிட்ட சிந்தட்டிக் போதை பொருள் கடத்தல் கும்பலின் 'நெட் ஒர்க்' முழுதையும் துண்டிக்கவும், அவர்களை கைது செய்யவும், 2024, ஆக., 5ல், ஏ.என்.ஐ.யு., எனப்படும் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவை உருவாக்கினார்.
இப்பிரிவு போலீசார், சென்னை நுண்ணறிவு பிரிவு துணை கமிஷனர் சக்திவேல் தலைமையில் செயல்பட்டு வருகின்றனர்.
அவர்கள், கடந்த மே மாதம் முழுதும், போதை பொருள் கடத்தல், விற்பனை மற்றும் பதுக்கி வைத்திருத்தல் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக, 110 வழக்குகளில், வெளி மாநிலங்களைச் சேர்ந்த 28 பேர் உட்பட, 228 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இவர்களில், கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக, 91 வழக்குகளில், 170 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து, 285 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். போதை மாத்திரைகள் விற்றது தொடர்பாக, ஏழு வழக்குகளில், 13 பேரை கைது செய்து, 1,554 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
மெத் ஆம்பெட்டமைன், மெத்தகுலோன், கோகைன் உள்ளிட்ட சிந்தட்டிக் போதை பொருள் கடத்தல் தொடர்பான கும்பலின் நெட் ஒர்க் கண்டறியப்பட்டு, அவர்கள் மீது 12 வழக்குகள் பதிவு செய்து, 45 பேரை கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் இருந்து, 133 கிராம் மெத் ஆம்பெட்டமைன், 1,541 கிராம் மெத்தகுலோன், 46.56 கிராம் ஹெராயின், 49 கிராம் கோகைன் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், கடந்த மே மாதத்தில், போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட, 16 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.