/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தல் 300 கிலோ பறிமுதல்; 2 பேர் கைது
/
ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தல் 300 கிலோ பறிமுதல்; 2 பேர் கைது
ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தல் 300 கிலோ பறிமுதல்; 2 பேர் கைது
ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தல் 300 கிலோ பறிமுதல்; 2 பேர் கைது
ADDED : ஏப் 23, 2025 12:15 AM

பம்மல், அனகாபுத்துார் புறவழிச்சாலையில், நேற்று அதிகாலை சங்கர் நகர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட ஈச்சர் சரக்கு வாகனத்தை மடக்கினர். ஆனால், அந்த வாகனம் நிற்காமல் சென்றது.
சந்தேகமடைந்த போலீசார் பின் தொடர்ந்து சென்றபோது, அருகேயுள்ள பெட்ரோல் பங்கில் நிறுத்தி, டீசல் நிரப்ப முயன்ற வாகனத்தை பிடித்தனர்.
வாகனத்தை ஏன் நிறுத்தவில்லை என, ஓட்டுநரிடம் கேட்ட போது, டீசல் இல்லை என்றும் நிறுத்தினால் மீண்டும் ஆன் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார்.
ஓட்டுநரின் பதிலில் திருப்தியடையாத போலீசார், வாகனத்தில் டீசலின் அளவை ஆய்வு செய்தனர். அதில், அரை டேங்க் அளவிற்கு டீசல் இருந்தது தெரியவந்தது.
பின், வாகனத்தை சோதனை செய்த போது, உள்ளே திராட்சை பெட்டிகள் இருந்தன. வாகனத்தின் மேற்பகுதியில் இருந்த மூட்டைகளை இறக்கி பார்த்தபோது, அதில் 300 கிலோ கஞ்சா இருந்தது.
விசாரணையில், வேனில் வந்தவர்கள், மகாராஷ்டிராவை சேர்ந்த தேஜஸ்பாபு வாக்மேரே, 28, சாகர் சகாதேவ் இரண்டே, 31, என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மொத்தமாக விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், இவர்கள் மீது ஏற்கனவே மகாராஷ்டிரா மாநிலத்தில் மூன்று கஞ்சா வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், 1.50 கோடி ரூபாய் மதிப்புள்ள, 300 கிலோ கஞ்சா மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர். சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

