ADDED : ஜன 02, 2025 12:20 AM
சென்னை
சென்னை மாநகராட்சியின் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியான பெருங்குடி மண்டலம், ஊராட்சிகள், பேரூராட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்டது. இதனால், அடிப்படை வசதிகளான பாதாள சாக்கடை, குடிநீர் திட்ட வசதி இல்லாமல் இருந்தது.
இதையடுத்து, பெருங்குடி மண்டலம் உருவாக்கப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு பின் மடிப்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் துவக்கப்பட்டது. 338 சாலைகள் புதிதாக அமைக்கப்பட உள்ளன.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
பெருங்குடி மண்டலத்தில் திட்டப் பணிகள் முடிக்கப்பட்ட வார்டுகள் உள்ளிட்ட, 11 வார்டுகளிலும், 338 சாலைகள், 52,704 மீட்டர் துாரம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில், சிமென்ட், தார்ச்சாலைகள் அடங்கும். இச்சாலை, 40.32 கோடி ரூபாயில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பணி விரைவில் துவக்கப்படும்.
இவ்வாறு கூறினர்.

