/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சோழிங்கநல்லுாரில் 3,500 குடும்பங்கள் தவிப்பு தடுப்பு பணிக்கு இடையூறு செய்வோரால் திணறல்
/
சோழிங்கநல்லுாரில் 3,500 குடும்பங்கள் தவிப்பு தடுப்பு பணிக்கு இடையூறு செய்வோரால் திணறல்
சோழிங்கநல்லுாரில் 3,500 குடும்பங்கள் தவிப்பு தடுப்பு பணிக்கு இடையூறு செய்வோரால் திணறல்
சோழிங்கநல்லுாரில் 3,500 குடும்பங்கள் தவிப்பு தடுப்பு பணிக்கு இடையூறு செய்வோரால் திணறல்
ADDED : அக் 18, 2024 12:23 AM

சென்னை, சோழிங்கநல்லுார் மண்டலம், 199வது வார்டு, சோழிங்கநல்லுார், மாடர்ன் பள்ளி சாலை 2 கி.மீ., நீளம், 40 அடி அகலம் உடையது.
இந்த சாலையில், காசாகிராண்ட், ரேடியன்ஸ், பிரெஸ்டீஜ், பேங்கர் உள்ளிட்ட அடுக்குமாடி குடியிருப்பில், 3,500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த சாலையில், 1.4 கி.மீ., துாரம் வரை பிரச்னை இல்லை. இடையில், 600 மீட்டர் துார சாலையை, சிலர் உரிமை கொண்டாடி, வளர்ச்சி பணிகளுக்கு இடையூறு செய்து வருகின்றனர்.
இதனால், சாலை, வடிகால், குடிநீர், கழிவுநீர் குழாய் பதிக்க முடியாமல், அதிகாரிகள் திணறுகின்றனர்.
இந்த சாலையில் தாழ்வான பகுதியில், 15ம் தேதி வெள்ளம் தேங்கியது. அதை, அருகில் உள்ள ரெட்டைக்கேணி ஏரியில் வடிய செய்ய, மாநகராட்சி, பகுதிமக்கள் இணைந்து சாலை ஓரம் தற்காலிக மண் கால்வாய் அமைத்தனர்.
அப்போது சிலர், காரை குறுக்கே நிறுத்தி, பணிக்கு இடையூறு செய்தனர். இது தொடர்பாக, செம்மஞ்சேரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இது குறித்து, பகுதிமக்கள் கூறியதாவது:
சி.எம்.டி.ஏ., அனுமதியுடன் கட்டிய வீடுகளை, 70 முதல் 1.20 கோடி ரூபாய் வரை செலுத்தி வாங்கி உள்ளோம். இந்த பகுதி பேரூராட்சியாக இருந்தபோதே, சாலை அமைத்தனர்.
அதை தொடர்ந்து, மாநகராட்சி பராமரித்து வருகிறது. குடியிருப்புக்கு செல்லும் ஒரே சாலை இதுதான். ஒவ்வொரு மழைக்கும், வீடுகளுக்கு செல்ல முடியாத வகையில் சிரமப்படுகிறோம்.
அதிகாரிகளிடம் கூறினால், மேல் அதிகாரிகளை பாருங்கள் என சுற்ற விடுகின்றனர். வீடு கட்ட அனுமதி வழங்கும் அரசு துறைகளே அடிப்படை வசதி செய்து தர மறுப்பது எந்த விதத்தில் நியாயம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாநகராட்சி, குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'சாலை, வடிகால், மின்விளக்கு, குடிநீர், கழிவுநீர் வசதி செய்து கொடுக்க தயாராக உள்ளோம். ஒரு சிலர், அப்பணிக்கு இடையூறு செய்கின்றனர். இது குறித்து, உயர்அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்' என்றனர்.