மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் 'ராட்வைலர்' நாய்களுக்கு கட்டுப்பாடு: கால்நடை அதிகாரி ஆஜராக உத்தரவு
மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் 'ராட்வைலர்' நாய்களுக்கு கட்டுப்பாடு: கால்நடை அதிகாரி ஆஜராக உத்தரவு
ADDED : ஆக 10, 2025 02:19 AM

சென்னை: பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும், 'ராட்வைலர்' உள்ளிட்ட ஆக்ரோஷமிக்க நாய்களுக்கு கட்டுப்பாடு விதிக்க கோரிய வழக்கில், உரிய விளக்கங்களுடன், வரும் 12ம் தேதி நேரில் ஆஜராகும்படி, சென்னை மாநகராட்சி தலைமை கால்நடை மருத்துவ அதிகாரிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.தமிழ்வேந்தன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு:
சென்னை மாநகரில், பொது மக்களுக்கு அச்சுறுத்தலாகவும், மூர்க்கத்தனமாகவும் உள்ள நாய்களை, அவற்றின் உரிமையாளர்கள் முகக்கவசம் அணியாமல், தெருக்களில் அழைத்து செல்கின்றனர்.
இதுபோல, உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் அழைத்து செல்லப்பட்ட, வெளிநாட்டு வகையைச் சேர்ந்த 'ராட்வைலர்' நாய்கள் கடித்து, சிறுவர் - சிறுமியர், வயதானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுபோன்ற ஆக்ரோஷமான நாய்களை தடை செய்ய வேண்டும் அல்லது முறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க, சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக, ஜூன் 10ல் அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர்கள் எம்.காமேஷ், எம்.செந்தில்குமார் ஆஜராகி, 'கடந்த ஜூன் மாதம், சென்னை வண்ணாரப்பேட்டை, கொளத்துார் உட்பட பல்வேறு பகுதிகளில், கர்ப்பிணி, பெண் மற்றும் சிறுமியர், 'ராட்வைலர்' நாய் கடிக்கு ஆளாகியுள்ளனர்.
'மூர்க்கத்தனமான, உயிருக்கு அச்சுறுத்தலான இதுபோன்ற நாய்களை, பொது வெளியில் அழைத்து வர தடை விதிக்க வேண்டும்' என்றனர்.
மாநகராட்சி தரப்பில் வழக்கறிஞர் அருண்பாபு, அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆகியோர் ஆஜராகி, பொது மக்களை நாய்கள் தாக்கும் சம்பவங்களை கட்டுப்படுத்தும் திட்டத்தை தாக்கல் செய்ய உள்ளதாகவும், அதற்கு அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து நீதிபதிகள், 'பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள, 'ராட்வைலர்' உள்ளிட்ட ஆக்ரோஷமான நாய்களை கட்டுப்படுத்துவது குறித்த விளக்கங்களுடன், வரும் 12ம் தேதி நேரில் ஆஜராகும்படி, சென்னை மாநகராட்சி தலைமை கால்நடை மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.