பா.ஜ., நிர்வாகி ஜாமின் மனு சேலம் கோர்ட்டுக்கு உத்தரவு
பா.ஜ., நிர்வாகி ஜாமின் மனு சேலம் கோர்ட்டுக்கு உத்தரவு
ADDED : ஆக 10, 2025 02:18 AM
சென்னை:சேலம் மாவட்டம், ஏற்காடு பட்டிப்பாடியை சேர்ந்த காவலாளி வெள்ளையன் என்பவர், அதே கிராமத்தில் உள்ள எஸ்டேட்டில் பணிபுரிந்து வருகிறார். ஜூலை 19ல், தோட்ட பணியில் ஈடுபட்டிருந்தபோது, பக்கத்து தோட்ட உரிமையாளரான பா.ஜ., மாநில செயலர் சிபி சக்கரவர்த்தி, காவலாளியை தாக்கி, ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, வெள்ளையன் அளித்த புகாரின்படி, சிபி சக்கரவர்த்தி, அவரது தந்தை மணவாளன் உள்ளிட்டோர் மீது, ஏற்காடு போலீசார், வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவு களின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக, சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்த நாளில், தங்களுக்கு உடனே ஜாமின் வழங்க உத்தரவிட வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில், சிபி சக்கரவர்த்தி, அவரது தாய், தந்தை ஆகியோர் மனுதாக்கல்செய்துள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி, ''குற்றம் சாட்டப்பட்டவர்கள் சரணடைந்து, ஜாமின் கோரும்போது, புகார்தாரரின் ஆட்சேபங்களையும் கேட்ட பின், ஜாமின் மனு மீது முடிவெடுக்க வேண்டும்,'' என, சேலம் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டு, மனுவை முடித்து வைத்தார்.