/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரசு நிலத்தை விற்று மோசடி: 4 பேர் கைது
/
அரசு நிலத்தை விற்று மோசடி: 4 பேர் கைது
ADDED : ஏப் 24, 2025 11:46 PM

ஆவடி, ஆலந்துார், புனித தோமையார் மலை காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவருக்கு ரியல் எஸ்டேட் தரகர் பிரகாஷ் பாபு, அப்துல் ரசாக் மற்றும் அவர்களது நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரகாஷ்பாபு ''திருவள்ளூர் மாவட்டம், பெருங்காவூரில் 1.47 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், அந்த நிலத்தை குறைந்த விலையில் தரலாம்,'' என, தேவேந்திரனிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
தேவேந்திரன் மற்றும் அவரது உறவினர்களிடம், 54.48 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு 9,000 சதுர அடி நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளனர். சில நாட்கள் கழித்து, தேவேந்திரனின் உறவினர்கள் இடத்தை விற்பனை செய்ய முயன்றபோது, அது அரசு புறம்போக்கு நிலம் என தெரிந்தது.
மோசடி நபர்கள் வேறு ஒருவருக்கு சொந்தமான இடத்தின் சர்வே எண்களை கொண்டு, 'சூப்பர் லக் சிட்டி விரிவாக்கம்' என்ற பெயரில் 'லே அவுட்' போட்டு, போலி ஆதாரங்கள், அரசு முத்திரை மற்றும் போலி பட்டா தயாரித்து, அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை ஏமாற்றியது தெரிந்தது.
இது குறித்து கடந்த ஜன., 7ம் தேதி ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. புகாரை விசாரித்த தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த செங்குன்றம் அடுத்த விளங்காட்டுபாக்கத்தைச் சேர்ந்த காமராஜ், 59, ஸ்ரீனிவாசன், 55, எம்.கே.பி நகரைச் சேர்ந்த முகமது சித்திக், 46, முகமது அலி ஜின்னா, 49, ஆகியோரை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

