/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'பங்க்' உரிமையாளர் கொலை வழக்கில் 4 பேர் கைது
/
'பங்க்' உரிமையாளர் கொலை வழக்கில் 4 பேர் கைது
ADDED : ஜூலை 03, 2025 12:27 AM

கூவத்துார்,
காத்தான்கடையில் பெட்ரோல் 'பங்க்' உரிமையாளர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேரை, கூவத்துார் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கூவத்துார் அடுத்த பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ், 42. காத்தான்கடை கிழக்கு கடற்கரை சாலையில் பெட்ரோல் 'பங்க்' நடத்தி வந்தார்.
வழக்கம்போல கடந்த 29ம் தேதி இரவு 11:00 மணிக்கு பெட்ரோல் 'பங்க்'கை மூடிவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டார். காத்தான்கடை அருகே, அவரது இருசக்கர வாகனத்தை வழிமறித்த மர்ம நபர்கள், அரிவாளால் சரமாரியாக வெட்டினர்; மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மோகன்ராஜ் உயிரிழந்தார்.
இது குறித்து விசாரித்த கூவத்துார் போலீசார், கூவத்துார், நாவக்கால் பகுதியைச் சேர்ந்த ரகு, 32, அவரின் நண்பர்களான தட்சணாமூர்த்தி, 26, ரவீந்திரன், 27, கதிர்வேல், 27, ஆகிய நான்கு பேரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
விசாரணையில் தெரிய வந்ததாவது:
கடந்த மாதம் மோகன்ராஜின் பெட்ரோல் 'பங்க்'கில் ரகுவிற்கும், தண்டரை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க்கில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவின்படி, ரகு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், ஜாமினில் வெளிவந்த ரகு, கண்காணிப்பு கேமரா காட்சிகளை வெளியிட்ட மோகன்ராஜை, நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது.
இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மூன்று பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.