/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சுரங்கம் தோண்டும் 4 இயந்திரங்கள் பணி முடித்து 10 நாளில் வெளியேறும்; மெட்ரோ ரயில் திட்ட அதிகாரி தகவல்

ADDED : அக் 10, 2025 07:51 AM
சென்னை; இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், இதுவரை 24 கி.மீ., சுரங்கம் தோண்டும் பணிகள் முடிந்துள்ளன. அடுத்த 10 நாட்களில், சுரங்கம் தோண்டும் பணிகளை முடித்து, நான்கு இயந்திரங்கள் வெளியே வரும் என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மொத்தம் 117 கி.மீ.,க்கு மூன்று வழித்தடங்களில் பணிகள் நடந்து வருகின்றன. இதில், 69 கி.மீ.,க்கு சுரங்கப்பாதையாக அமைக்கப்படுகின்றன.
இப்பணிக்காக 20க்கும் மேற்பட்ட ராட்சத கனரக இயந்திரங்கள், சுரங்கம் தோண்டும் பணியை மேற்கொண்டு வருகின்றன.
இப்பணி குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநர் அர்ச்சுனன் கூறியதாவது:
இரண்டாம் கட்ட திட்டத்தில், மொத்தம் 43 கி.மீ.,க்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. தற்போது, 20 ராட்சத இயந்திரங்கள் கொண்டு, சுரங்கம் தோண்டி வருகிறோம்.
இதுவரை 24 கி.மீ.,க்கு சுரங்கம் தோண்டும் பணி முடிந்துள்ளது. ஒவ்வொரு ராட்சத இயந்திரமும், தினமும் 10 மீட்டருக்கு சுரங்கம் தோண்டுகிறது.
இதற்கிடையே, கிரீன்வேஸ் சாலை முதல் மந்தவெளி வரை 773 மீட்டர்; ராயப்பேட்டை முதல் ஆர்.கே., சாலை வரை 908 மீட்டர்; சைதாப்பேட்டை, பனகல் பூங்கா முதல் கோடம்பாக்கம் மீனாட்சி கல்லுாரி வரை 2,044 மீட்டர்; கொளத்துார் ரேம்ப் முதல் கொளத்துார் வரை 238 மீட்டருக்கு சுரங்கம் தோண்டும் பணிகள் முடிந்துள்ளன.
அடுத்த 10 நாட்களில், இந்த நான்கு இயந்திரங்களும் வெளியேற்றப்படும். இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில், முதலில் பூந்தமல்லி - போரூர் இடையே மேம்பால ரயில் சேவை, இந்த ஆண்டு இறுதியில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.