/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குப்பையில் தயாரான 40 லட்சம் கிலோ உரம்... தேக்கம்! விவசாயிகளுக்கு வழங்க மாநகராட்சி பேச்சு
/
குப்பையில் தயாரான 40 லட்சம் கிலோ உரம்... தேக்கம்! விவசாயிகளுக்கு வழங்க மாநகராட்சி பேச்சு
குப்பையில் தயாரான 40 லட்சம் கிலோ உரம்... தேக்கம்! விவசாயிகளுக்கு வழங்க மாநகராட்சி பேச்சு
குப்பையில் தயாரான 40 லட்சம் கிலோ உரம்... தேக்கம்! விவசாயிகளுக்கு வழங்க மாநகராட்சி பேச்சு
ADDED : ஆக 15, 2024 11:26 PM

சென்னை மாநகராட்சியில் குப்பையில் இருந்து தயாரிக்கப்பட்ட 40 லட்சம் கிலோ உரம் தேக்கமடைந்துள்ளது. இவற்றை விவசாயிகளிடம் சேர்க்க, வேளாண் துறையுடன் மாநகராட்சி பேசி வருகிறது.
சென்னை மாநகராட்சி 426 சதுர கி.மீ., பரப்பளவு உடையது. மாநகராட்சி பகுதியில் மட்டும் ஒரு கோடி பேர் வசிக்கின்றனர்; 16 லட்சத்துக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தினமும் 62 லட்சம் கிலோ திடக்கழிவு சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த திடக்கழிவுகள், பெருங்குடி, கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது.
ஆர்வம் குறைவு
தற்போது, இரண்டு குப்பை கிடங்கையும் மூடி, அந்நிலத்தை மீட்டெடுப்பதற்கான, 'பயோ மைனிங்' பணி நடந்து வருகிறது.
சென்னை மாநகரில் எங்கும் குப்பை கிடங்கு இல்லாத நிலை உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி பகுதிகளில் சேகரமாகும் குப்பை, மக்கும், மக்காத குப்பையாக தரம் பிரித்து, அவற்றை உரம் மற்றும் உபயோகப்படுத்தப்படும் பொருட்களாக மாற்றப்படுகின்றன. இதற்காக ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே போல, மாற்ற முடியாத குப்பையை எரித்து சாம்பலாக்குவதற்கும் ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்க, 208 தயாரிப்பு நிலையங்கள் உள்ளன. இவற்றில் இருந்து தினமும், 4.50 லட்சம் கிலோ உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த உரம், மாநகராட்சி பூங்காக்களில் பயன்படுத்தப்பட்டாலும், 40 லட்சம் கிலோ உரங்கள் தேக்கமடைந்துள்ளன.
விவசாயிகளுக்கும் இந்த உரம் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ, 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால், குப்பையில் தயாராகும் உரத்தை வாங்குவதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை.
உரம் தயாரிக்கும் ஆலைகளில் இருந்து எடுத்து செல்ல போக்குவரத்து செலவு போன்றவற்றால், விவசாயிகளிடம் ஆர்வம் குறைந்துள்ளது.
இதனால், தயாரிக்கப்பட்டுள்ள உரம் தேங்கிவருவதால், உற்பத்தி பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
சிமென்ட் கற்கள்
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் 70 சதவீத மக்கள் குப்பையை வீடுகளிலேயே தரம் பிரித்து வழங்குகின்றனர். அதன் வாயிலாக, 26 லட்சம் கிலோ மக்கும் குப்பை மாநகராட்சிக்கு தினமும் சேகரமாகிறது. அவற்றில் இருந்து உரம் தயாரிக்கப்படுகிறது.
அந்த உரங்கள் மக்கள் பயன்பாட்டிற்கும் வழங்கப்படுகிறது. முதலில் ஒரு கிலோ, 20 ரூபாய் விற்பனை செய்யப்பட்டு, தற்போது 10 ரூபாயாக விலை குறைத்து விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரம், விவசாய நிலங்களுக்கு கிலோ 3 ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு பேச்சு நடந்து வருகிறது. அதன்படி, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு உரங்கள் விற்பனை செய்வதற்காக வேளாண் துறையுடன் பேச்சு நடந்து வருகிறது.
உரங்கள் வாங்குவதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டால், மாநகராட்சியில் சேகரிக்கப்படும் 26 லட்சம் கிலோ மக்கும் குப்பை, உரமாக மாற்றப்பட்டு, விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும். இதன் வாயிலாக, சென்னையில் பெருமளவு குப்பை தேக்கம் குறையும்.
அத்துடன், பிளாஸ்டிக் போன்ற மக்காத பொருட்கள், பிரித்தெடுக்கப்பட்டு மறுசுழற்சிக்கு வழங்கப்படுகிறது. எதற்கும் பயன்படாத கழிவு, மணலியில் உள்ள ஆலையில் எரியூட்டப்பட்டு, அதன் சாம்பலில், சிமென்ட் கற்களாக தயாரிக்கப்படும்.
அடுத்த 2028ம் ஆண்டுக்கு பின், குப்பை கிடங்கு இல்லாத சென்னை மாநகராட்சியாக உருவாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -