/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
44 மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி; முதல் நாளிலே திண்டாடிய பயணியர்
/
44 மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி; முதல் நாளிலே திண்டாடிய பயணியர்
44 மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி; முதல் நாளிலே திண்டாடிய பயணியர்
44 மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி; முதல் நாளிலே திண்டாடிய பயணியர்
ADDED : பிப் 21, 2026 06:41 AM

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டு பணி காரணமாக, கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில், 44 மின்சார ரயில்கள் சேவை நேற்று முதல் ரத்தானதால், பயணியர் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
மாற்றியமைக்கப்பட்ட அட்டவணைப்படி ரயில்களை இயக்காதது, எழும்பூரில் சிக்னல் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தை ரயில்வே நிர்வாகம் தீர்க்க முடியாமல் தவித்தது.
வழக்கத்தைவிட கூடுதலாக இயக்கப்பட்ட மாநகர பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டாலும், கூட்ட நெரிசலில் சிக்கி பயணியர் அவதிப்பட்டனர்.
சென்னையின் பிரதான ரயில் நிலையமான எழும்பூரில் 734.91 கோடி ரூபாயில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.
ஊர்ந்து சென்றன இதனால், கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் ஏப்., 5ம் தேதி வரை 44 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. முதல் நாளான நேற்று, இந்த தடத்தில் மாற்றியமைக்கப்பட்ட அட்டவணைப்படி 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை மின்சார ரயிலை இயக்கவில்லை.
செங்கல்பட்டில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரயில் எழும்பூரில் வழக்கமாக நடைமேடை 10, 11ல் செல்லும்போது ஒரு நிமிடத்தில் உள்ளே சென்றுவிடும்.
தற்போது, நடைமேடை 5, 6ல் மாற்றி விடுவதால், தண்டவாளங்கள், சிக்னலை கடந்து செல்ல 7 முதல் 10 நிமிடங்கள் வரை ஆனது.
இதனால், சேத்துப்பட்டில் இருந்து கோட்டை ரயில் நிலையம் வரை, மின்சார ரயில்கள் வரிசை கட்டி நிறுத்தப்பட்டன. சிக்னல் கிடைத்த பின், மெதுவாக ஊர்ந்து சென்றன .
ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும், பயணியர் 30 முதல் 45 நிமிடங்கள் வரை காத்திருந்து அவதிப்பட்டனர். இதனால் நிற்கக்கூட இடமில்லாமல், நெரிசலில் சிக்கி பயணியர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பலர் தண்டவாளங்களில் இறங்கி வெளியே சென்று, ஆட்டோ, மாநகர பேருந்துகளில் பயணம் செய்தனர்.
மின்சார ரயில்கள் தாமதம் ஏற்பட்டதால், சென்ட்ரல், எழும்பூரில் இருந்து வெளியூர் விரைவு ரயில்களையும் பயணியர் சிலர் தவறிவிட்டனர்.
செங்கல்பட்டு - கடற்கரை தடத்தில் மின்சார ரயில்கள் குறைக்கப் பட்டதால், பயணியர் வசதிக்காக, வழக்கத்தைவிட மாநகர பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன.
ஆனாலும், கூடுவாஞ்சேரி, தாம்பரம், கிண்டி உள்ளிட்ட பேருந்து நிலையங்களிலும், பயணியர் கூட்டம் அலைமோதியது. விமான நிலையம் - விம்கோ நகர் தடத்தில் செல்லும் மெட்ரோ ரயில்களிலும், பயணியர் முண்டியடித்து சென்றனர்.
முதல் நாளே பரிதவிப்பு பயணியர் கூறியதாவது :
ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியத்தால் ரயில்கள் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், பணிக்கு செல்வோர், விரைவு ரயில் பிடிக்க செல்வோர் என, அனைத்து பயணியரும் கடும் அவதிக்குள்ளாகினர்.
முதல் நாளே, இந்த நிலையில் இருக்கிறது. எழும்பூரில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும். விரைவு பாதைகளிலும் மின்சார ரயில்களை இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதிகாரிகள் சொல்வது? ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
நடைமேடை 10, 11ல் நடைமேம்பாலம் பணி நடப்பதால், 15 கி.மீ., வேகத்தில் மட்டுமே, ரயில்கள் செல்ல முடியும்.
எழும்பூர் ரயில் நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் விரைவு ரயில்களும், புறநகர் ரயில்களும் இணையாக பயணிப்பதால், புறநகர் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படலாம்.
சேத்துப்பட்டு - கடற்கரை ரயில் நிலையம் இடையே, பேருந்துகள் அதிகம் இயக்கப்பட உள்ளது. கூடுதல் மெட்ரோ ரயில்களை இயக்கவும் கோரிக்கை விடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

