/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'கிரெடாய் பேர்புரோ - 2026' வீட்டுவசதி கண்காட்சி: துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார்
/
'கிரெடாய் பேர்புரோ - 2026' வீட்டுவசதி கண்காட்சி: துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார்
'கிரெடாய் பேர்புரோ - 2026' வீட்டுவசதி கண்காட்சி: துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார்
'கிரெடாய் பேர்புரோ - 2026' வீட்டுவசதி கண்காட்சி: துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார்
ADDED : பிப் 21, 2026 06:37 AM

சென்னை: 'கிரெடாய் பேர்புரோ - 2026' என்ற மூன்று நாள் வீட்டுவசதி கண்காட்சியை, துணை முதல்வர் உதயநிதி, சென்னையில் நேற்று துவக்கி வைத்தார்.
'கிரெடாய்' என்ற இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் சென்னை பிரிவு சார்பில், 18வது ஆண்டாக வீட்டு வசதி கண்காட்சி, நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நேற்று துவங்கியது.
கண்காட்சியை, துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார். கண்காட்சி குறித்த முழுமையான தகவல்கள் அடங்கிய புத்தகத்தை அவர் வெளியிட, கிரெடாய் நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.
விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ், கிரெடாய் தேசிய செயற்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், தேசிய இணை செயலர் சுரேஷ் கிருஷ்ணன், சென்னை பிரிவின் முன்னாள் தலைவரும், கண்காட்சி ஆலோசகருமான சிவகுருநாதன், கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் மோதிஷ் குமார், எஸ்.பி.ஐ., சென்னை வட்ட தலைமை பொது மேலாளர் விவேகானந்த் சவுபே ஆகியோர் பங்கேற்றனர் .
கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் மோதிஷ் குமார் கூறியதாவது:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், கிரெடாய் உறுப்பினர்களின் நிறுவனங்கள் செயல்படுத்தும் திட்டங்கள், ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. அனைத்து கட்டுமான நிறுவனங்களின் திட்டங்கள் குறித்து, பொதுமக்கள் அறிய இந்த வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
கடந்த, 17 ஆண்டுகளாக, 'பேர்புரோ' என்ற பெயரில் கண்காட்சி நடத்தி வருகிறோம். இந்த வகையில், 18வது ஆண்டாக தற்போது இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில், 85 நிறுவனங்களின், 500க்கும் மேற்பட்ட திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
இதில், மொத்தம், 5.72 கோடி சதுரடி பரப்பளவுக்கான வீடு, மனை திட்டங்கள் குறித்த விபரங்கள் பொது மக்களுக்கு கிடைக்கும்.
கண்காட்சியில், 15 லட்சம் ரூபாய் முதல், 15 கோடி ரூபாய் வரையிலான விலைகளில், 56,000 வீடு, மனைகள் விற்பனைக்கு உள்ளன. இங்கு முன்பதிவு செய்வோருக்கு, வெளியில் வாங்குவதை விட குறிப்பிட்ட தொகை தள்ளுபடி செய்ய வாய்ப்புள்ளது. வீடு, மனை வாங்குவோருக்கு யாரும் எதிர்பார்க்காத வகையில், கட்டுமான நிறுவனங்கள் பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்குகின்றன.
இது மட்டுமின்றி, இங்கு வீடு வாங்க முன்பதிவு செய்வோருக்கு, 7.1 சதவீதம் என்ற சலுகை வட்டி விகிதத்தில் வீட்டுக்கடன் வழங்க, எஸ்.பி.ஐ., வங்கி முன்வந்துள்ளது. வீட்டுக்கடன் நடைமுறை கட்டணத்தில், 30 சதவீதம் வரை தள்ளுபடி பெற வாய்ப்புள்ளது. அப்பல்லோ மருத்துவமனையும் இதில் ஒரு மருத்துவ பங்காளராக பங்கேற்றுள்ளது.
கண்காட்சியில் முதல் நபராக, மோகன சுந்தரம் என்பவர், காசா கிராண்ட் நிறுவன அரங்கில் வீடு வாங்க முன்பதிவு செய்தார். இந்த கண்காட்சியை, இன்றும், நாளையும், காலை, 10:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

