/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உடல் உறுப்பு தானத்தால் 5 பேருக்கு மறுவாழ்வு
/
உடல் உறுப்பு தானத்தால் 5 பேருக்கு மறுவாழ்வு
ADDED : ஜன 04, 2025 12:33 AM
சென்னை,ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டதில், ஐந்து பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன், அவசர சிகிச்சைத் துறை தலைவர் கோமதி ஆகியோர் கூறியதாவது:
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரைச் சேர்ந்தவர் ரோகிணி, 40. தன் கணவர் மற்றும் இரு மகள்களுடன், திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் வசித்து வந்தார்.
திடீரென அவருக்கு பக்கவாத பாதிப்பு ஏற்பட்டதால், உயர் சிகிச்சைக்காக, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பல்நோக்கு மருத்துவத் துறை கண்காணிப்பில் இருந்து வந்த அவர், டிச., 31ல் மூளைச்சாவு அடைந்தார். அவரது உறுப்புகளை தானமளிக்க குடும்பத்தினர் முன்வந்தனர். அதன்படி, சிறுநீரகங்கள், கல்லீரல், விழி வெண்படலங்கள் ஆகியவை தானமாகப் பெறப்பட்டன.
அதில், கல்லீரல், ஒரு சிறுநீரகம், ராஜிவ்காந்தி மருத்துவமனையில், இரு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. மற்றொரு சிறுநீரகம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கும், விழி வெண்படலங்கள், எழும்பூர் கண் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன.
உடல் உறுப்புகளை தானமாக வழங்கி, பிறருக்கு மறுவாழ்வு அளித்த ரோகிணியின் உடலுக்கு, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.