/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூதாட்டியிடம் செயின் திருட்டு திருச்சி பெண்கள் 5 பேர் கைது
/
மூதாட்டியிடம் செயின் திருட்டு திருச்சி பெண்கள் 5 பேர் கைது
மூதாட்டியிடம் செயின் திருட்டு திருச்சி பெண்கள் 5 பேர் கைது
மூதாட்டியிடம் செயின் திருட்டு திருச்சி பெண்கள் 5 பேர் கைது
ADDED : அக் 01, 2025 02:46 PM
மறைமலை நகர்:
சிங்கபெருமாள் கோவிலில் மூதாட்டியிடம் தங்க ஜெயின் திருடிய, திருச்சியைச் சேர்ந்த ஐந்து பெண்கள் கைதாகினர்.
காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த ஆதனுார் பகுதியைச் சேர்ந்த வேணுகோபால் மனைவி பாஞ்சாலி, 62. இவர் நேற்று முன்தினம் காலை, சிங்கபெருமாள் கோவிலில் உள்ள பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு வந்தார்.
அவரது கழுத்தில் இருந்த 5 சவரன் செயின் மாயமானது. இது குறித்த புகாரையடுத்து மறைமலை நகர் போலீசார், கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், அன்னதானம் வழங்கும் இடத்தில் ஐந்து பெண்கள் மூதாட்டியை சுற்றி நின்று, ஒரு பெண் மட்டும் அவரது கழுத்தில் இருந்த தங்க செயினை கடித்து எடுக்கும் காட்சி பதிவாகி இருந்தது.
இதுகுறித்து, சிங்கபெருமாள் கோவில் பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் கூறப்பட்டு, சிங்கபெருமாள் கோவில் ஜி.எஸ்.டி., சாலையில் பேருந்துக்காக காத்திருந்த அந்த ஐந்து பெண்களை கைது செய்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதில், பிடிபட்ட அந்த பெண்கள் திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியை சேர்ந்த மஞ்சுளா தேவி, 42, சித்ரா, 28, மீனா, 31, முத்துமாரி, 60, அஞ்சலி, 30, என தெரிந்தது.
கோவில் திருவிழா, கும்பாபிஷேகம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கும்பலாக சென்று தங்க நகைகள் அணிந்திருக்கும் பெண்களை குறி வைத்து திருடி வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.