/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழை வெள்ளத்தால் சின்னாபின்னமான 5,000 சாலைகள் --வண்டி ஓட்ட முடியல:தடுமாறி விழுந்து அடிபடுவதாக வாகன ஓட்டிகள் குமுறல்
/
மழை வெள்ளத்தால் சின்னாபின்னமான 5,000 சாலைகள் --வண்டி ஓட்ட முடியல:தடுமாறி விழுந்து அடிபடுவதாக வாகன ஓட்டிகள் குமுறல்
மழை வெள்ளத்தால் சின்னாபின்னமான 5,000 சாலைகள் --வண்டி ஓட்ட முடியல:தடுமாறி விழுந்து அடிபடுவதாக வாகன ஓட்டிகள் குமுறல்
மழை வெள்ளத்தால் சின்னாபின்னமான 5,000 சாலைகள் --வண்டி ஓட்ட முடியல:தடுமாறி விழுந்து அடிபடுவதாக வாகன ஓட்டிகள் குமுறல்
UPDATED : டிச 05, 2025 07:17 AM
ADDED : டிச 05, 2025 07:12 AM

மழை வெள்ளத்தால், சென்னையில் 5,000க்கும் மேற்பட்ட சாலைகள் சின்னாபின்னமாகியுள்ளன. கரடு முரடாக, மரண பள்ளங்களாக மாறியுள்ளதால், வாகனங்களை இயக்க முடியாமல், வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். தற்காலிகமாக, 'பேட்ச் ஒர்க்' எனும் சாலை ஒட்டுப்பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சென்னையில், 387 கி.மீ., நீளத்திற்கு 471 பேருந்து வழித்தட சாலைகள்; 5,270.33 கி.மீ., நீளத்திற்கு, 34,640 உட்புற சாலைகள்; 16 சுரங்கப்பாதை, மேம்பாலங்களை, சென்னை மாநகராட்சி பராமரித்து வருகிறது.
அதேபோல், அண்ணா சாலை, 100 அடி சாலைகள், மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட பல்வேறு நெடுஞ்சாலைகளை, மாநில அரசின் நெடுஞ்சாலைத் துறை பராமரித்து வருகிறது.
'டிட்வா' புயல் இந்நிலையில், 'டிட்வா' புயலால் சென்னையில் நான்கு நாட்களாக பெய்த மழையால், நெடுஞ்சாலைகள், பிரதான சாலைகள் மற்றும் உட்புற சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வடிந்தாலும், மூன்று நாட்களாக தண்ணீர் தேங்கியதால், மாநகராட்சி முழுதும் பல சாலைகள் கண்டமாகியுள்ளன. பெரிய பள்ளங்கள் விழுந்தும், குண்டும் குழியுமாகவும், ஜல்லிக்கற்கள் பெயர்ந்தும் சாலை சேதமடைந்துள்ளன.
இதனால் வாகன ஓட்டிகள், தங்களது வாகனங்களை இயக்க முடியாமல் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். குறிப்பாக பெண்கள், அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். தினசரி, 30க்கும் மேற்பட்டோர் கரடு, முரடான சாலைகளால் விபத்தில் சிக்கி படுகாயம் அடைகின்றனர்.
அதேபோல், நான்கு சக்கர வாகனங்களும், மேடு பள்ளங்களில் இயக்கப்படுவதால், அவற்றின் பாகங்கள் சேதமடைகின்றன.
இதனால், சாலைகள் மற்றும் மேம்பாலங்களிலும் வாகனங்களை இயக்க முடியாமல், வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
'பேட்ச் ஒர்க்' இதற்கு முன், மழை பெய்தாலும் அவசரம் கருதி, வண்டல் மண், ஜல்லிக்கற்கள் மற்றும் சிமென்ட் கலவை கொண்டு தற்காலிக அடிப்படையில், சாலைகளை மாநகராட்சி சீரமைத்து வந்தது. தற்போது, மண்டலத்திற்கு போதிய அளவு சீரமைப்புக்கான நிதி தராததால், முறையாக பராமரிக்க முடியவில்லை.
அதேநேரம், பல இடங்களில் தற்போது தான் புதிதாக சாலை அமைக்க, பழைய சாலை பெயர்த்தெடுக்கப்பட்டுள்ளது. மழையால் அச்சாலையும் போடப்படாததால், வாகன ஓட்டிகள் மேலும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மாநகராட்சி சாலைகள், அந்தந்த மண்டலம் வாரியாக சீரமைக்கப்படும். மெட்ரோ ரயில் பணி நடக்கும் இடங்களில், மெட்ரோ நிர்வாகம் தான் சீரமைக்க வேண்டும். அனைத்து துறைகளுடனும் இணைந்து, சாலையை சீரமைக்க அறிவுறுத்தி உள்ளோம்.
சென்னையில், 5,000க்கும் மேற்பட்ட சாலைகள் சேதமடைந்துள்ளன. தற்போது மழை பெய்து வரும் நிலையில், மழை நின்றபின், உடனடியாக 'பேட்ச் ஒர்க்' எனும் சாலை ஒட்டுப்பணி நடக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

