/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
6 தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மீது அதிருப்தி; மீண்டும் 'சீட்' கிடைக்குமா என்பது கேள்விக்குறி
/
6 தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மீது அதிருப்தி; மீண்டும் 'சீட்' கிடைக்குமா என்பது கேள்விக்குறி
6 தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மீது அதிருப்தி; மீண்டும் 'சீட்' கிடைக்குமா என்பது கேள்விக்குறி
6 தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மீது அதிருப்தி; மீண்டும் 'சீட்' கிடைக்குமா என்பது கேள்விக்குறி
UPDATED : மே 30, 2025 04:02 AM
ADDED : மே 29, 2025 11:48 PM

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 6 பேருக்கு மீண்டும் சீட்டு கிடைக்குமா? என்ற கேள்வி, அக்கட்சி வட்டாரங்களில் எழுந்துள்ளது.
தி.மு.க., தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் நேரு, வேலு, தங்கம் தென்னரசு, ஆர்.எஸ்.பாரதி என, ஐந்து பேர் இடம் பெற்றுள்ளனர். சட்டசபை தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வு பட்டியலை தயாரிக்கும் பணிகளில், இக்குழு ஈடுபட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள, 234 சட்டசபை தொகுதிகளில் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்களின் செயல்பாடுகள் குறித்து சர்வே எடுக்கப்பட்டுள்ளது. அதில் சென்னை மாவட்டம், அதன் புறநகர் பகுதிகளைச் சேர்த்து, மொத்தம், 23 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் தி.மு.க., 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்கள் 6 பேருக்கு, மீண்டும் சீட்டு கிடைக்குமா என்ற சிக்கல் எழுந்துள்ளது.
இது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: சென்னையில் அதிகாரமிக்க, கோலோச்சுகிற மாவட்ட செயலர் ஒருவர், தன் மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளில், தன் ஆதரவாளர்களையும், தனக்கு இணக்கமாக பணியாற்றுவோரையும் போட்டியிட வைக்க, காய் நகர்த்தி வருகிறார். சென்னை மாவட்டத்தில் உள்ள சில தொகுதிகளின் எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டச் செயலர்கள் மற்றும் அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லாமல், துணை முதல்வர் உதயநிதியின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட துவங்கி உள்ளனர்.
சென்னை மாவட்டத்தில், தன் ஆதரவாளர்களை வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற வைப்பதில், மாவட்டச் செயலருக்கும், துணை முதல்வருக்கும் போட்டி உருவாகி உள்ளது. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா போட்டியிட விரும்பும் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.,வுக்கு, மீண்டும் போட்டியிட வாய்ப்பு இல்லை. மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்களிடம் மோதல் போக்கை கடைபிடித்த எம்.எல்.ஏ.,வுக்கு மீண்டும் சீட்டு தரவாய்ப்பு இல்லை. துப்புரவு தொழிலாளியை வெறும் கையால் கழிவுநீர் அகற்ற வைத்த எம்.எல்.ஏ.,வுக்கும் மறுபடி போட்டியிட வாய்ப்பு இல்லை.
மழை வெள்ளம் பாதிப்பு ஏற்பட்ட தொகுதிகளில், எட்டி பார்க்காத எம்.எல்.ஏ., மீதும் தொகுதி மக்கள் அதிருப்தியில் இருப்பதால், மீண்டும் அவர்களுக்கு போட்டியிட சீட்டு இல்லை. தொகுதி மக்களை சந்திக்க நேரம் ஒதுக்காமல், தன் சொந்த தொழிலை மட்டும் கவனித்து வரும் எம்.எல்.ஏ.,வுக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு இல்லை. கட்சி நிர்வாகிகளிடமும், பொதுமக்களிடமும் நல்ல பெயர் எடுக்காத எம்.எல்.ஏ.,வுக்கும் மீண்டும் சீட்டு தர வாய்ப்பில்லை.
இந்த அடிப்படையில், சென்னை புறநகரில் இரண்டு பேர், வட சென்னையில் நான்கு பேர் என, மொத்தம் 6 பேருக்கு, மீண்டும் சீட்டு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நமது நிருபர் -