ADDED : நவ 13, 2024 10:15 PM
சென்னை:சென்னையில், வெவ்வேறு இடங்களில் மெத் ஆம்பெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்த, 6 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
கே.கே.நகர், காரில் மெத் ஆம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்தி வந்த, 5 பேரை கடந்த மாதம், 4ம் தேதி தனிப்படை போலீசார் கைது செய்து, 50 கிராம் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். கைதானோருக்கு, நைஜீரியா நாட்டைச் சேர்ந்த சின்வேபா ஜோஸ்வா, 35 உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
தலைமறைவாக இருந்த அவரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 20 கிராம் மெத்ஆம்பெட்டமைன், 2 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
* அதேபோல் மடிப்பாக்கம் பஜார் சாலையில் உள்ள தங்கும் விடுதியில், போதைப் பொருள் வைத்திருந்த வேளச்சேரியைச் சேர்ந்த அஸ்வின் பிரைநாட், 24, கோபாலகிருஷ்ணன், 24 உட்பட, 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 24 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதைப் பொருள், 3 மொபைல் போன்கள் மற்றும் எடை இயந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.