/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில 'ரோடு சைக்கிளிங்' 6 மாணவ - மாணவியர் தகுதி
/
மாநில 'ரோடு சைக்கிளிங்' 6 மாணவ - மாணவியர் தகுதி
ADDED : டிச 11, 2024 12:07 AM
சென்னை,
வருவாய் மாவட்ட அளவில் நடந்த, சாலை சைக்கிள் பந்தயத்தின் மூன்று பிரிவுகளில், இருபாலரிலும் தலா மூன்று மாணவ - மாணவியர் முதலிடங்களை பிடித்து, மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
------------------ அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில், வருவாய் மாவட்ட அளவில் பல்வேறு விளையாட்டு போட்டிகள், சென்னையில் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், புதிதாக சேர்க்கப்பட்ட 12 விளையாட்டு போட்டிகளில் ஒன்றான, 'ரோடு சைக்கிளிங்' எனும், சாலை சைக்கிள் பந்தய போட்டி, நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது.
போட்டியில், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர். இருபாலருக்கும், 14, 17, 19 வயதுக்கு உட்பட மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.
மாணவியருக்கான 14 வயது பிரிவில், தி சில்ட்ரன்ஸ் கார்டன் பள்ளியின் மாணவி ரெஜினா திருநாவுக்கரசி முதலிடம் பிடித்தார். முகப்பேர் பெண்கள் பள்ளியின் தீபிகா, செயின்ட் உர்சுலா பள்ளியின் மோகனா ஸ்ரீ, வித்யோதயா பள்ளியின் தன்ஷிகா ஆகியோர், அடுத்தடுத்த இடங்களை கைப்பற்றினர்.
அதேபோல், 17 வயது பிரிவில், குட் ஷெப்பர்ட் பள்ளியின் ஜமிளா முதலிடத்தையும், செயின்ட் உர்சுலா பள்ளியின் திவ்யா இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். தொடர்ந்து, 19 வயதில், சேது பாஸ்கரா பள்ளியின் தாக் ஷியாணி முதலிடத்தையும், பெத்யேல் மெட்ரிக் பள்ளியின் பிரியங்கா இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.
மாணவருக்கான போட்டியில், 14 வயதில் சேது பாஸ்கரா பள்ளியின் மனிஷ் பாலாஜி, 17 வயதில் கலிகி ரங்கநாதன் பள்ளியின் சூர்யா, 19 வயதில் சேது பாஸ்கரா பள்ளியின் விஷ்ணு பிரியன் ஆகியோர் முதலிடங்களை பிடித்து அசத்தினர்.
இப்போட்டியில் மூன்று பிரிவுகளிலும் முதலிடங்களை பிடித்த தலா மூன்று மாணவ, மாணவியர், மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.