ADDED : நவ 14, 2025 11:56 PM

தாம்பரம்: தாம்பரம் போலீஸ் கமிஷனரக எல்லையில், 603 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் கைது செய்யப்பட்டனர்.
குரோம்பேட்டை அடுத்த திருநீர்மலை, நயாரா பெட்ரோல் 'பங்க்' அருகே, குரோம்பேட்டை போலீசார், நேற்று முன்தினம், வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, இன்னோவா காரை நிறுத்தி சோதனை நடத்தியதில், 29 பைகளில், தடை செய்யப்பட்ட, 305 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் கடத்தி வருவது தெரியவந்தது.
குட்கா கடத்தலில் ஈடுபட்ட திருத்தணியைச் சேர்ந்த ராமச்சந்திரன், 52, திருவள்ளூரைச் சேர்ந்த விக்னேஷ், 34, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், திருத்தணியில் இருந்து வாங்கி வந்து, குரோம்பேட்டை, பல்லாவரம், திருநீர்மலை பகுதிகளில் உள்ள பெட்டி கடைகளுக்கு வினியோகம் செய்தது தெரியவந்தது.
குட்கா புகையிலை பொருட்கள், 11,000 ரூபாய், கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிடங்கில் பதுக்கல் இதேபோல், தையூரில் பழைய பிளாஸ்டிக் சேமிப்பு கிடங்கை, கேளம்பாக்கம் காவல் துறையினர், நேற்று முன்தினம் காலை சோதனை செய்தனர். அதில், 298 கிலோ குட்கா பொருட்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கிடங்கின் உரிமையாளரான ரபிக் என்பவரை தேடி வருகின்றனர்.

