/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
படப்பையில் இருதரப்பு மோதல் 7 பேர் காயம்; 12 பேர் கைது
/
படப்பையில் இருதரப்பு மோதல் 7 பேர் காயம்; 12 பேர் கைது
படப்பையில் இருதரப்பு மோதல் 7 பேர் காயம்; 12 பேர் கைது
படப்பையில் இருதரப்பு மோதல் 7 பேர் காயம்; 12 பேர் கைது
ADDED : ஆக 29, 2025 12:23 AM
படப்பை, படப்பை அருகே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில், இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஏழு பேர் காயமடைந்தனர்; 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
படப்பை அருகே சாலமங்கலம் ஊராட்சி, சிறுமாத்துார் கிராமத்தில் செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், நேற்று முன்தினம் இரவு விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
இதைத்தொடர்ந்து, இரவு உற்சவர் விநாயகர் வீதி உலா வாணவேடிக்கையுடன் நடந்தது. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பா.ம.க., பிரமுகர் சீனிவாசன் என்பவரது வீட்டின் வெளியே பட்டாசு வெடிக்க, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த சிலர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது, சற்று தொலைவில் பட்டாசு வெடிக்குமாறு சீனிவாசன் கூறியுள்ளார். ஆனால், வீதியுலாவில் பங்கேற்றோர் செவிசாய்க்கவில்லை. இதனால் ஏற்பட்ட வாக்குவாதம், இருத்தரப்புக்கு இடையே கைகலப்பாக மாறியது.
இதில், இரண்டு தரப்பினரும் உருட்டு கட்டை, பீர் பாட்டில் ஆகியவற்றால், ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.
இதில், இரு தரப்பைச் சேர்ந்த ஏழு பேர் பலத்த காயமடைந்தனர். இவர்களை, அப்பகுதி மக்கள் தடுத்து சமாதானம் செய்தனர். இதையடுத்து, காயமடைந்தவர்கள் படப்பை மற்றும் குரோம்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் மணிமங்கலம் போலீசார் பா.ம.க., பிரமுகர் சீனிவாசன், 52, மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆறு பேர், எதிர்தரப்பைச் சேர்ந்த அ.தி.மு.க.,வைச் சேர்ந்த செல்வம், 38, மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆறு பேர் என, மொத்தம் 12 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.