/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'பார்க்கிங்'காக மாறும் தி.நகர் மேம்பாலம்: 70 கார், 2,000 பைக் நிறுத்த அனுமதி
/
'பார்க்கிங்'காக மாறும் தி.நகர் மேம்பாலம்: 70 கார், 2,000 பைக் நிறுத்த அனுமதி
'பார்க்கிங்'காக மாறும் தி.நகர் மேம்பாலம்: 70 கார், 2,000 பைக் நிறுத்த அனுமதி
'பார்க்கிங்'காக மாறும் தி.நகர் மேம்பாலம்: 70 கார், 2,000 பைக் நிறுத்த அனுமதி
UPDATED : அக் 24, 2024 07:03 AM
ADDED : அக் 24, 2024 12:39 AM

தி.நகர், தி.நகரில் மெட்ரோ ரயில் பணி மற்றும் மேம்பால பணி நடந்து வருவதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனால், தி.நகர் மற்றும் பாண்டி பஜார் பகுதியில்,'பீக் ஹவர்'களில் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புத்தாடை மற்றும் இனிப்பு வாங்க தி.நகருக்கு அதிக அளவில் மக்கள் குவிய துவங்கியதால், போதிய 'பார்க்கிங்' வசதியின்றி, மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், கூட்டம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதனால், மாநகராட்சி மற்றும் போலீசார் போதிய ஏற்பாடுகளை செய்வதுடன், பார்க்கிங் குறித்து வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் எனவும், எங்கெல்லாம் வாகனங்கள் நிறுத்த முடியும் எனவும், நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.
இதில், மேம்பால பணிக்காக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில், வாகனங்களை நிறுத்தலாம் என, குறிப்பிட்டிருந்தோம்.
இதையடுத்து, மேம்பாலத்தில் வாகனங்களை நிறுத்த, மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. தொடர்ந்து, அதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
போக்குவரத்து உதவி கமிஷனர் ராஜா கூறியதாவது:
உஸ்மான் சாலை மேம்பாலத்தில் வாகனங்களை நிறுத்த, வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மேம்பாலத்தின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படும். இதில், 70 கார்கள் மற்றும் 2,000 'பைக்'குகள் நிறுத்த முடியும்.
இன்று முதல் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்படும். அதேபோல், தனியார் பள்ளிகளையும் கேட்டுள்ளோம். சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் வாகனங்களை நிறுத்த, பள்ளி நிர்வாகங்கள் அனுமதி வழங்கி உள்ளன.
எங்கெல்லாம் வாகன நிறுத்தங்கள் உள்ளன என்பதை வாகன ஓட்டிகள் எளிமையாக அறியும் வகையில், தி.நகர் மற்றும் பாண்டி பஜார் பகுதிகளில் ஆங்காங்கே, அறிவிப்பு பலகை வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

