/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிராட்வேயில் இருந்து இயக்கப்படும் 700 பஸ்கள் விரைவில் ராயபுரம், தீவுத்திடலில் இருந்து இயக்கம்
/
பிராட்வேயில் இருந்து இயக்கப்படும் 700 பஸ்கள் விரைவில் ராயபுரம், தீவுத்திடலில் இருந்து இயக்கம்
பிராட்வேயில் இருந்து இயக்கப்படும் 700 பஸ்கள் விரைவில் ராயபுரம், தீவுத்திடலில் இருந்து இயக்கம்
பிராட்வேயில் இருந்து இயக்கப்படும் 700 பஸ்கள் விரைவில் ராயபுரம், தீவுத்திடலில் இருந்து இயக்கம்
ADDED : ஜன 03, 2026 05:55 AM

சென்னை: பிராட்வேயில் இருந்து இயக்கப்படும் 700 மாநகர பேருந்துகளும், விரைவில், ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் இருந்து பிரித்து இயக்குவதற்கான பட்டியலை, மாநகர போக்குவரத்து கழகம் தயாரித்துள்ளது.
சென்னையின் பழமையான பேருந்து நிலையங்களில் ஒன்றாக பிராட்வே பேருந்து நிலையம் உள்ளது.
இங்கிருந்து, தென், மத்திய, வடசென்னை பகுதிகளுக்கு, தினமும் 700 பேருந்துகள், 2,000க்கும் மேற்பட்ட சர்வீஸ்களாக இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், போதிய பராமரிப்பு, அடிப்படை வசதிகளின்றி பேருந்து நிலையம் படுமோசமாக இருந்தது.
இதையடுத்து, மின்சார ரயில், மெட்ரோ உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளுடன், வணிக வளாகங்களோடு ஒருங்கிணைந்த மையமாக 652 கோடி ரூபாயில் அமைய உள்ளது. இதற்கான, ஆரம்ப கட்ட பணிகளை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'பிராட்வே பஸ் நிலையத்தில் இருந்து, 700 மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
'அவற்றை ராயபுரத்தில் இருந்து மட்டும் இயக்க முடியாது. எனவே, கூடுதலாக தீவுத்திடலில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
'இதனால், பிராட்வேயில் இருந்து செல்லும் அனைத்து பஸ்களும், அடுத்த 10 நாட்களில் ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் இருந்து பிரித்து இயக்குவோம்' என்றனர்.
விதிமீறல் 'பார்க்கிங்' அகற்றம்
ராயபுரம், இப்ராஹிம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையம், பணிகள் முடிந்தும் மாதக்கணக்காக திறக்கப்படவில்லை. இதனால் மைதானமாகவும், 'பார்க்கிங்' பகுதியாகவும், இரவில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறியது.
இது குறித்து, கடந்த 23ம் தேதி நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, அங்கு தடுப்புகள் அமைத்து போக்குவரத்து கழகம் சார்பில், சுழற்சி முறையில் காவலாளிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். போலீசாரும் கண்காணித்து வருகின்றனர்.

