/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடற்கரை 'ஷாப்பிங் மால்' அல்ல மெரினாவில் கடையை குறையுங்க! மாநகராட்சிக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி
/
கடற்கரை 'ஷாப்பிங் மால்' அல்ல மெரினாவில் கடையை குறையுங்க! மாநகராட்சிக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி
கடற்கரை 'ஷாப்பிங் மால்' அல்ல மெரினாவில் கடையை குறையுங்க! மாநகராட்சிக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி
கடற்கரை 'ஷாப்பிங் மால்' அல்ல மெரினாவில் கடையை குறையுங்க! மாநகராட்சிக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி
UPDATED : ஜன 03, 2026 07:26 AM
ADDED : ஜன 03, 2026 05:54 AM
சென்னை: 'கடற்கரை என்பது ஷாப்பிங் மால் அல்ல' என்று தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், 'மெரினா கடற்கரையில் உணவுப் பொருட்கள், பொம்மைகள், பேன்சி பொருட்கள் விற்கும் கடைகள் தவிர, வேறு எவ்வித கடைகளையும் அனுமதிக்கக்கூடாது' என, சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த தேவி, மெரினாவில் தனக்கு கடை ஒதுக்கக்கோரி, கடந்த ஜூலை 5ல், மாநகராட்சி கமிஷனருக்கு கோரிக்கை மனு அளித்தார். மனுவை பரிசீலிக்க, மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.
கடற்கரையில் ஆய்வு வழக்கு விசாரணையின்போது, மாநகராட்சி தாக்கல் செய்த வரைபடத்தில், கடைகளுக்கான இடங்கள் பற்றிய தகவல் தெளிவாக இல்லை என, நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அடங்கிய அமர்வு தெரிவித்தது. தொடர்ந்து, கடந்த டிச., 22ல் நீதிபதிகள் கடற்கரையை ஆய்வு செய்தனர்.
இந்த வழக்கு, அதே அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாநகராட்சி, வனத்துறை மற்றும் காவல் துறை சார்பில், கடைகள் எண்ணிக்கை பற்றிய வரைபடம், அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை பார்வையிட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
கடந்த டிச., 22ல், மெரினா கடற்கரையை இரண்டு மணி நேரம் பார்வையிட்டோம்.
அப்போது, 'மெரினா கடற்கரையின் ஒரு பகுதி, நீலக்கொடி சான்று பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இரு பகுதிகளை நீலக்கொடி சான்று பகுதிகளாக அறிவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன' என, மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் விவரித்தனர்.
35 ஏக்கர் இடம் உலகில் இரண்டாவது நீளமான கடற்கரை மெரினா. இங்கு தலைவர்களின் நினைவிடங்கள் உள்ள பகுதியின் பின்புறம், 35 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம் பயன்படுத்தப்படாமல் இருந்தது.
அந்த இடத்தில் உள்ள புற்கள், புதர்களை அகற்றி, நீலக்கொடி சான்று பகுதியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கும்படி, மாநகராட்சிக்கு அறிவுறுத்தி இருந்தோம். அந்த பணிகளை மாநகராட்சி துவக்கி உள்ளது.
தொழிலாளர் சிலைக்குப்பின், பெரிய அளவிலான நிரந்தர கடைகள் உள்ளன. இவற்றை அகற்ற வேண்டும்.
மெரினாவில், 'ட்ரோன்' வாயிலான கணக்கெடுப்பில், 1,980 கடைகள் உள்ளது என்றும், நேரடி ஆய்வில், 1,417 கடைகள் உள்ளது எனவும், மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
உலகில் வேறு எந்த கடற்கரையிலும் இவ்வளவு கடைகள் இல்லை. இவ்வளவு கடைகள் தேவையற்றது. இது கவலை அளிக்கும் விஷயம்.
கடற்கரை என்பது ஒரு வணிக வளாகமோ அல்லது கடைவீதியோ அல்ல. மெரினா கடற்கரை அழகை கண்டு ரசிப்பதற்காக, வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் அதிகம் பேர் வந்து செல்லும் பொழுதுபோக்கு இடம் மட்டுமே. அவ்வாறு இருக்கும்போது, இவ்வளவு எண்ணிக்கையில் கடைகள் தேவையற்றது.
உணவு பொருட்கள், பொம்மை, பேன்சி பொருட்கள் விற்கும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி தர வேண்டும். வேறு எந்த பொருட்களையும், மெரினா கடற்கரையில் விற்க தேவையில்லை. அதற்கு அனுமதியும் வழங்கக்கூடாது.
சாலையில் இருந்து கடலின் அழகை ரசிக்க முடியாத அளவுக்கு கடைகள் மறைப்பதால், தற்போது, 1,417 கடைகள் அமைப்பது என்ற திட்டத்தை மறு ஆய்வு செய்து, கடைகளின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க வேண்டும்.
நீலக்கொடி சான்று பகுதிகளில், எந்தவொரு கடைகளையும் அமைக்கக்கூடாது. மீதமுள்ள பகுதியை, குறைவான கடைகளை அமைக்கவும், மீதமுள்ள இடத்தை பொதுமக்கள் கடற்கரையின் அழகான சூழலை அனுபவிப்பதற்கும், சிறந்த முறையில் பயன்படுத்தப்படுகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
கடைகளின் எண்ணிக்கையை குறைத்து, மாநகராட்சி புதிய திட்டத்தைத் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஜன.,8க்கு தள்ளிவைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

